‘உரு’ குறும்படம் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்?

1147

ஈழத்தின் மூத்த திரைச் செயற்பாட்டாளர் ஞானதாஸ் காசிநாதர் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய குறும்படம் ‘உரு’. இந்தப் படம் ஏற்கனவே இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் சில நாடுகளில் திரையிடப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், அண்மையில் இப்படம் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்தும் ஈழ சினிமா விரும்பிகள், படைப்பாளிகள் என பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பேஸ்புக்கில் ஈழ சினிமா செயற்பாட்டாளர்கள் மற்றும் சினிமா விரும்பிகள் சிலர் தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து பார்க்கலாம்

Ling Chinnaav – “காணாமல் ஆக்கப்பட்டவர்களை அந்த காளியாத்தவாள கூட கண்டுபிடிக்க முடியாது”

ஈழத்தை மூன்று வழிகளில் அறியலாம் ஒன்று அண்ணே சீமான் வழி, சோத்துமூட்டைகளுக்கானது.முட்டாள்கள் அலையென திரளும் இடம் அது. அடுத்து CBI ரகோதமன் வழியாக அறிந்துகொள்வது, சால்சாப்பாற்றது, நேர்மையான அனலைஸ், மனசுல தமிழ்த்திமிர் இல்லன்னா அக்சப்ட் பண்ணமுடியும். அடுத்து குழந்தைகளை யுத்தத்தில் இழந்த அம்மாக்களின் வழியே புரிந்துகொள்வது. இது மிக முக்கியமான வழி.

உரு மூன்றாவது ரகம். நிஜங்களை படம்பிடிக்க அவர்கள் நுழைந்திருப்பது காணாமல் ஆக்கப்பட்ட தன் மகனிற்காக பாதி பைத்தியமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தாயின் வீட்டிற்குள்.
கதை இதுதான் என்ற தெளிவும் பிடிவாதமும் படத்திற்கு மிகப்பெரிய பலம். இடைவிடாமல் இறுக்கிப்பிடிக்கும் வித்தை எல்லா இயக்குநர்களுக்கும் அமைந்துவிடுவதில்லை. ஞானதாஸ் காசிநாதர் ஒரு கெப்டனை போல செயலப்பட்டிருக்க வேண்டும் இல்லையென்றே இப்படி ஒரு படம் வர சாத்தியம் குறைவு.

நடிகர்கள் என்று சிலரை தேர்வு செய்திருப்பது தரம், ஒருவருக்கொருவர் இது என் படம் என்று நினைத்தால் மட்டுமே இப்படியெல்லாம் நடித்துவிட முடியும். உண்மையில் ஈழ சினிமா வளர்ச்சியை உருவிற்கு முன், உருவிற்கு பின் என்றும் கூட வகைப்படுத்த முடியும். என்ன கண்கள் அந்த கேமரமேனுக்கு..!

Sooriyaprathap Soori – “உரு” குறுந்திரைப்படம், நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு காணக்கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி!

இருபது நிமிடக்குறும்படமொன்று, ஈழத்தமிழ் சினிமாவை மீளக்கட்டியெழுப்ப முடியும் என்கிற பெரும் நம்பிக்கையை கொடுக்கிறது. இயக்குநர் Gnanadas Kasinathar போன்ற திரை ஆளுமைகள் போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்! ஈழ சினிமாக்கனவை நோக்கிய நகர்வில் “உரு” முக்கியமானதொரு பதிவு. படக்குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்!

Vel Velauthapillai – 2009 இற்று பின்னர் ஊரிலிருந்து சுதந்திரமாக இயங்க முடியாத நிலையிலும்.. அங்குள்ள காணாமல் போனோர் வலிகளை குறும் திரையூடாக கலைஞர்கள் கொண்டு வந்த வண்ணம் தான் இருந்தனர். புலம்பெயர் தேசங்களில் போதிய சுதந்திரம் இருந்தும் எமது கலைஞர்கள் திரையில் தமிழருக்காக குரல் கொடுக்க தயங்கினர் என்பதும் வரலாறு.. புலம்பெயர் தமிழர்களில் கலைஞர்கள் இனி தமிழர் தரப்பில் இருந்து தமிழருக்காக திரையை கையாள வேண்டும்..

Gowtham Maran – இதுவரை ஈழத்திரைத்துறை சார்ந்து வெளிவந்த படைப்புகளில் பலவற்றை, அதன் கருத்தியல் கவனம் பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், சிலவற்றை அதன் அழகியல் நேர்த்திக்காகவும் இங்கே பகிர்ந்திருக்கின்றேன். இவை இரண்டிலும் முழுமைபெற்ற, எம்மவரின் மிகச்சிறந்த படைப்பு, ஞானதாஸ் சேரின் ‘உரு (Trance)’.

திரைமுயற்சியென்பது, தனி நபர் ஓடும் காரோட்டமல்ல, அது ஊர்கூடி இழுக்கவேண்டிய தேரோட்டமென்பதை இக்குறும்படத்தில் பணியாற்றியோரின் எண்ணிக்கையை இதன் ‘Youtube Description’ இல் பார்த்தாலே புரியும். படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஈழத்திரைத்துறையின் துரோணாச்சாரியார் ஞானதாஸ் சேர். அருகிலிருக்கும் அர்ச்சுணர்களையும், அதேவேளை விலகியே இருக்கும் ஏகலைவர்களையும் ஒன்றாகவே எண்ணி அன்பு பாராட்டுபவர். இக்கூட்டுழைப்புத்தொடர்ந்தால், ஈழத்திரைத்துறை குருஷேஸ்திரம் காணாமலேயே பட்டாபிஷேகம் காணும் நாள் வெகுதொலைவிலில்லை.