பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்

390

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கண்ணன் நேற்று (13.06.2020) காலமானார்.

69 வயதான இவர் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவின் 40 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் நேற்று மதியம் உயிரிழந்தார்.

கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச்சடங்கு இடம்பெற்றது. கண்ணனின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.