டென்மார்க் ஷண் இன் “இரு கில்லாடிகள்” திரைப்படம் ஜூன் 20 இல் வெளியீடு

819

இலங்கையின் மூத்த திரைக்கலைஞரான டென்மார்க் ஷண் இன் இயக்கத்தில் உருவான “இரு கில்லாடிகள்” திரைப்படம் எதிர்வரும் 20 ஆம் திகதி யு-ரியூப்பில் வெளிவரவுள்ளதாக இயக்குனர் அறிவித்துள்ளார்.

இவரின் இயக்கத்தில் அண்மையில் வெளியான “நெருஞ்சி முள்” திரைப்படம் பல நாடுகளிலும் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் இவர் தனது “ஷான் இன்டர்நஷனல்” நிறுவனம் ஊடாக இலங்கை – இந்தியக் கலைஞர்களை வைத்து உருவாக்கிய “இரு கில்லாடிகள்” திரைப்படத்தை இணையத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இரு கில்லாடிகள் படத்தில் கலைஞர் தொலைக்காட்சியின் “மானாட மயிலாட” நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற பயாஸ் என்கிற கிருஷ், சுவாதி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளதுடன் கனகப்ரியா, அசோக், அலெக்ஸ், செல்வி, கணேஷ், கிரேஸி, விஜய்பாலாஜி ஆகிய புதுமுகங்களும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் வெண்ணிற ஆடைமூர்த்தி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

கவிஞர் அறிவுமதி , “காதல் சாரல் தூறலில் நனைந்தேன்… உயிரிலே ஊனிலே உறவிலே நான்…” எனத் தொடங்கும் பாடலை எழுதியுள்ளார். பி.எஸ்.செல்வத்தின் ஒளிப்பதிவில் இப்படத்தை எழுதி, இசையமைத்து, இயக்கி, தயாரித்துள்ளார் டென்மார்க் ஷண்.