ரஜினியின் ‘அண்ணாத்த’ எப்போது ரிலீஸ்?

484

கொரோனாவால் ஒட்டுமொத்த திரையுலகமே முடங்கியுள்ள நிலையில், ஏற்கனவே வெளியீட்டுக்குத் தயாரான விஜய், சூர்யா, தனுஷ் போன்ற பெரிய நடிகர்களுடைய படங்களும் ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் நடித்துவரும் படங்களும் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் அரைவாசி படப்பிடிப்பை முடித்து விட்டனர். மீதி படத்தையும் முடித்து ஒக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். கொரோனாவால் படத்தின் ரிலீசை தள்ளி வைத்து பொங்கலுக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவித்தது. அப்போதும் படம் வெளியாக வாய்ப்பில்லை மேலும் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.

கொரோனா முழுமையாக ஒழிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முடிவில் ரஜினி இருக்கிறார். அஜித்தின் வலிமை படப்பிடிப்பும் 50 சதவீதம் முடிந்துள்ளது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு மேலும் தள்ளிப்போகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 04 மாவட்டங்களுக்கு கடுமையான ஊரடங்கும், ஏனைய மாவட்டங்களுக்கு தளர்வுகளுடன் ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்தியா முழுவதும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, ஊரடங்கு முடிந்து மீண்டும் படப்பிடிப்புக்கள் ஆரம்பித்து, படங்கள் வெளியாகி ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி கூட்டம் கூட்டமாக வரும் வரை பெரிய பட்ஜட் படங்களை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் பின்னிற்பார்கள். தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் அளித்து தயாரிப்பாளர்கள் வயிற்றில் பாலை வார்க்குமா விஜய்யின் ‘மாஸ்டர்’ என்பது தான் தற்போது கோலிவூட்டின் எதிர்பார்ப்பு.