CONNECT – ‘கலையால் ஒன்றிணைவோம்’ – யாழ். கலைஞர்கள் சந்திப்பு

1011

Ceynema International, Back to Ceylon, Sri Lanka National Film Cooperation and Sanchaari ஏற்பாட்டில் யாழ். திண்ணை விருந்தினர் விடுதியில் அண்மையில் CONNECT – ‘கலையால் ஒன்றிணைவோம்’ – யாழ். மாவட்ட சினிமா கலைஞர்களுக்கான ஒன்றுகூடல் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இதில் “கோமாளி கிங்ஸ்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் தாரணி ராஜசிங்கம், இயக்குனர் கிங் ரட்ணம், நடிகை நிரஞ்சனி சண்முகராஜா, நடிகை நவயுகா, ஒளிப்பதிவாளர், துணை நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், யாழில் இருந்து தொடர்ச்சியாக சினிமா தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பல கலைஞர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் சினிமா கலைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள், அதனைத் தீர்த்துக்கொள்ளும் நடைமுறைச்சாத்தியங்கள் குறித்து பேசப்பட்டது. அத்துடன், நேரடியாக இந்நிகழ்வில் பங்கேற்ற இலங்கைத் திரைப்படக்கூட்டுத்தாபனத்தை சேர்ந்த உறுப்பினர் பட வெளியீட்டிற்கான முறைமைகள் மற்றும் உள்ள சிக்கல்களை தெளிவு படுத்தினார்.

பத்திற்கும் மேற்பட்ட சிங்களக்கலைஞர்கள் பங்கேற்ற இந்த சந்திப்பில், தமிழ் – சிங்கள சினிமாக் கலைஞர்கள் பரஸ்பரம் தங்கள் அனுபவங்களையும், கஷ்ட நஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டனர். மேலும், சினிமா அனுபவம் மற்றும் தொழிற்தகைமைகளை வளர்த்துக் கொள்வதற்காக சிங்களப்படங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நிறைவான ஒரு கலந்துரையாடலாக இருந்த இந்த நிகழ்வைப் போல் வடக்கு, கிழக்கு, மலையகம் என நாடளாவிய ரீதியில் பல இடங்களிலும் எதிர்காலத்தில் CONNECT – ‘கலையால் ஒன்றிணைவோம்’ – நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிகழ்வை இயக்குனர் கிங் ரட்ணம் சிறப்பாக நெறிப்படுத்தியிருந்ததுடன், தனது சினிமா அனுபவங்களையும் இளையவர்களோடு பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் மூத்த கலைஞர்களான இசையமைப்பாளர் கண்ணன் மற்றும் இயக்குனர் பாபாஜி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.