‘உரு’ (TRANCE) – விமர்சனம்

542

‘ஸ்கிறிப்ட் நெட்’ தயாரிப்பில் ஞானதாஸ் காசிநாதர் இயக்கத்தில் சிவ சாந்தகுமாரின் ஒளிப்பதிவில் சஜீத் ஜெயகுமாரின் படத்தொகுப்பில் மதீசனின் இசையில் வெளிவந்துள்ள குறும்படம் ‘உரு’.

இலங்கையின் போர்க்காலச் சூழ்நிலையால் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடியலையும் தாயை மையமாகக் கொண்டு இக்கதை பின்னப்பட்டுள்ளது. மகனைத் தொலைத்த தாய் ஏறக்குறைய சித்தப்பிரமை பிடித்தவளாக அவனைத் தேடியலைவதும், அவளின் நிலை கண்டு கலங்கி நிற்கும் குடும்பத்தினரும், அவர்களை ஏமாற்றி பணம்பறிக்கும் கும்பலும் என்பதாக கதை தொடர்கின்றது.

2010 இல் இருந்து மீள எழுச்சி பெற்றுக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் சினிமாவில் பல படைப்பாளிகளும் கையாளும் ஒரு களமாக ‘காணாமல் போனோர்’ விடயம் இருக்கின்றது. அண்மையில் வெளியான மதிசுதாவின் ‘வெடிமணியமும் இடியன் துவக்கும்’ குறும்படமாகட்டும், ஆனந்தரமணனின் ‘ஆறாம் நிலம்’ முழு நீளப்படமாகட்டும் இந்தக் கதைக்களத்தை மையமாகக் கொண்டே பின்னப்பட்டவையாகும்.

எனவே, அதிலிருந்து ‘உரு’ எவ்விதம் வேறுபடுகின்றது என்பது தான் முக்கிய விடயம்! அதில் தான் இயக்குனர் ஞானதாஸின் திரைத்துறை அறிவும் அனுபவமும் வெளிப்படுகின்றது. ஒரு குறும்படம் இவ்வாறு தான் தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்கு, அல்லது ஈழ சினிமாவில் நுழையும் புதியவர்களுக்கு பாடம் சொல்லும் படமாக இக்குறும்படம் அமைந்திருக்கின்றது.

படத்தின் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என எல்லாமே நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பாத்திரத் தேர்வு ஒவ்வொன்றும் அருமை. அது மட்டுமல்லாது அதிகப்படியான துணை நடிகர்கள் இதில் நடித்திருப்பது இலங்கைத் தமிழ் சினிமாவில் பெரிய விடயமாகப் பார்க்கக்கூடியது.

குறிப்பாக படத்தின் பிரதான பாத்திரத்தில் மகனைத் தொலைத்த தாயாக நடித்திருக்கும் கலாநிதி ஜெயரஞ்சனி ஞானதாஸ் ஈழத்தில் தங்கள் உறவுகளைத் தொலைத்துவிட்டு ஓயாமல் தேடும் தாய்க்குலத்தை கண்முன் கொண்டு வருகின்றார். தந்தை, மகள் அவளது காதலன் என படத்தில் வரும் ஏனைய துணை நடிகர்களும் தங்கள் பாத்திரங்களை அறிந்து நடித்திருக்கின்றார்கள்.

‘நிதர்சனம்’ பிரிவில் தனது சினிமா செயற்பாடுகளை ஆரம்பித்த இப்படத்தின் இயக்குனர் ஞானதாஸ் ‘ஸ்கிறிப்ட் நெட்’ என்கிற சினிமா பட்டறையை உருவாக்கி இத்துறையில் பலரை பிரகாசிக்கச் செய்தவர். சினிமா போதனாசிரியராக ‘நமக்கான சினிமா’ எனும் கனவுடன் பல புதியவர்களைப் புடம்போட்ட அவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். முதல் பந்திலேயே மீண்டும் சிக்ஸர் விளாசியுள்ளார்.

இப்படம் பல சர்வதேச விருதுளைப் பெற்றுள்ளதுடன், பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

‘உரு’ படமல்ல பாடம்!

குவியம் புள்ளிகள் – 4.1/5