‘பூர்வீக நிலம்’ குறும்படம் (UK) – விமர்சனம்

869

கர்ணன் படைப்பகம் தயாரிப்பில் சண்முகநாதன் சபேசனின் இயக்கத்தில் உருவான குறும்படம் ‘பூர்வீக நிலம்’.

இதில் சபேசன், சதீசன், சுதர்சினி உள்ளிட்ட பலர் நடித்திருப்பதுடன், பல்வேறு தென்னிந்தியத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்திரைப்படங்களில் நடித்துள்ள ரமேஷ் வேதநாயகம் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் ஒருவன், தாயகத்தில் உள்ள தனது பூர்வீக நிலத்தின் மேல் கொண்ட பற்றை மையமாக வைத்து இக்குறும்படம் உருவாகியுள்ளது,

ஆப்கானியர்கள், ரோஹின்யர்கள், குர்திஷ்கள் வரிசையில் ஈழத்தமிழரும் தமக்கென ஒரு நாடு இருந்தும் அடக்குமுறை காரணமாக புலம்பெயர்ந்து இன்னொரு நாட்டில் தஞ்சம் புகுந்து வாழ்பவர்களாக இருக்கின்றனர்.

இலங்கையில் 30 வருட காலத்திற்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தமும், பேரினவாதத்தின் அடக்குமுறைகளும் பலரை புலம்பெயர வைத்திருக்கின்றது. அவ்வாறு புலம்பெயர்ந்த பலரது பூர்வீக நிலங்கள் இலங்கையில் இருக்கின்றன.

வெளிநாடுகளில் செட்டிலாகிவிட்ட பலர் தங்கள் பூர்வீக நிலங்களை விற்பதுவும், இங்கிருக்கும் பணம் படைத்தவர்கள், அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கு வீடு, தொழில் என தமது சொத்துக்களை பெருக்குபவர்கள் வெளிநாடுகளில் உள்ள அடுத்தவர்களின் பூர்வீக நிலங்களை பணத்திற்கு சுவீகரிப்பதுமாக பல நிகழ்வுகள் எம் மண்ணில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அப்படி ஒரு நிகழ்வில் தனது பூர்வீக நிலத்தை விட்டு விடக்கூடாது எனப் போராடும் பாத்திரத்தில் சபேசன் நடித்துள்ளார். அவரைச் சூழ உள்ளவர்கள் பூர்வீக நிலத்தின் தாற்பரியத்தை மறந்தவர்களாக, பணத்திற்காக நிலத்தை விற்க முயற்சிக்கின்றார்கள். இறுதியில் கண்கள் பனிக்க பூர்வீக நிலத்தின் மகிமைகளை சபேசன் விளங்கப்படுத்தி, வெளிநாடுகளில் உள்ள எம் வாரிசுகள் என்றோ ஒருநாள் பூர்வீக நிலத்தைத் தேடிப்போகும் என்கின்ற முக்கிய விடயத்தை புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் முன் வைக்கின்றார்.

கதை, திரைக்கதை, வசனம் என எடுத்துக் கொண்டால் இக்குறும்படத்தில் அவை நிறைவாக உள்ளன. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப விடயங்களில் இன்னும் கொஞ்சம் கவனமெடுத்திருந்தால் படம் வேறு ஒரு தளத்திற்கு சென்றிருக்கும். ஆனாலும், படம் சொல்ல வந்த செய்தி, புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழும் எம்மவர்களின் மனதை நெருங்கியிருப்பதால் சின்னச்சின்ன தவறுகளும் பெரிதாக வெளித்தெரியவில்லை.

படத்துக்கு படம் வித்தியாசமான வேடங்கள், வித்தியாசமான கதைக்களங்கள் என தன்னை ஒரு கை தேர்ந்த கலைஞனாக முன்னிறுத்திக் கொள்கின்றார் சபேசன். இப்படத்தில் அவருடன் கூட நடித்த கலைஞர்களும் இயல்பாக, கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக நடித்துச் சென்றுள்ளார்கள்.

இக்குறும்படம் ‘நோர்வே தமிழர் திரைப்பட விழா 2020’ இல் திரையிடத் தெரிவு செய்யப்பட்ட குறும்படமாகும். இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்நிகழ்வு இன்னமும் இடம்பெறவில்லை. இப்படம் அண்மையில் யு-ரியூப் இணையத்தில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

குவியம் புள்ளிகள் – 3.75/5