மாதவன் இயக்கத்தில் “SUNDAY” – Web Series

1693

இலங்கைத் தமிழ் சினிமாவில் குறும்படங்கள் மூலம் அறியப்பட்டவர் இயக்குனர் மாதவன் மகேஸ்வரன். இவரின் முதல் குறும்படமான “என்னாச்சு” முதல் இவரது சினிமாப் பயணம் ஏறுபடிகளாகவே அமைந்துள்ளது.

மாதவனின் “அப்பால்” குறும்படம் பல விருதுகளைக் குவித்துள்ளதுடன், சிங்கள சினிமாக்கலைஞர்கள் இடையே இவருக்கான அறிமுகத்தையும், பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்தது.

“சொப்பன சுந்தரி” என்ற பெயரில் முழு நீளத்திரைப்படத்தையும் தயாரித்து, அதன் வெளியீட்டு பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் அதன் வெளியீடு தாமதமடைந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு வலையமைப்பு ஒன்றின் “வெப் சீரீஸ்” இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. தனது தயாரிப்பு படைப்புக்களிலேயே அதகளப்படுத்தும் மாதவன், நிச்சயம் கிடைத்த வாய்ப்பை பொன்னாகப் பயன்படுத்துவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மாதவனின் பலம் “நண்பர்கள்”. இவரின் அனைத்துப் படைப்புக்களிலும் நண்பர்கள் வேலை பார்த்துள்ளார்கள். எனவே, அவர்கள் இல்லாமல் இந்த வெப் சீரிஸா? சான்சே இல்லை. வருண், ஜோயல், நரேஷ் என மாதவனின் நண்பர்களுடன், இலங்கையின் முன்னணி நடிகரான தர்சன் தர்மராஜ் மற்றும் நடிகை பேர்லிஜா ஆகியோரும் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.

“சன்டே” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸூக்கு மாதவனின் “சொப்பன சுந்தரி” யின் இசையமைப்பாளர் ஜீவானந்தன் ராம் இசையமைக்கின்றார். தற்சமயம் படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறைவு பெற்று பின்கள வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களை நடிகை பேர்லிஜா தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

விரைவில் “சன்டே” வெப் சீரிஸை காண உங்களைப் போல நாமும் ஆவலுடன் காத்திருக்கின்றோம். வாழ்த்துக்கள் குழுவினருக்கு…