த்ரில்லரான ‘துரோபன்’ குறும்படம்

765

பல்கலைக்கழகங்களில் ‘ராக்கிங்’ எனும் பகிடிவதை தடை செய்யப்பட்டிருந்தாலும் அது எழுதப்படாத பல்கலைக்கழக கலாசாரமாக இன்றும் தொடர்கின்றமை துரதிஷ்டம் தான்.

கொரோனாவின் வீரியம் இலங்கையில் ஆரம்பிப்பதற்கு முன்னர் கூட கொழும்பு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டதால், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான் என்ற செய்தியைப் படித்திருப்போம்.

அவன் தற்சமயம் அதிலிருந்து மீண்டு, மீண்டும் வகுப்புக்களுக்குச் செல்வதும், பழையதை மறந்து விட்டான் என்பதும் அண்மைய ஊடக செய்திகளாக இருக்கின்றன.

பகிடியாக ஆரம்பிக்கும் இவ்வாறான செயற்பாடுகள் துன்பத்தில் முடிந்து விடுவது தான் கொடுமை. அதிலும், பெண் பிள்ளைகள் மீது பாலியல் ரீதியில் கொடுக்கப்படும் வதைகளும் இதில் உள்ளடங்குவது தான் பெருங்கொடுமை.

எனவே, இந்த கருவை கதையாகக் கொண்டு அருவி கிரியேட்டிவ் ஸ்ரூடியோ சார்பில் சனோஜன் யோகதாஸ் எழுதி இயக்கியிருக்கும் குறும்படம் தான் ‘துரோபன்’.

ஒரு 10 நிமிடக் குறும்படத்தில் எவ்வளவு திருப்பங்களை வைக்க முடியுமோ அவ்வளவு வைத்து, சஸ்பென்ஸ், த்ரில்லராக படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர்.

கேகேஆர் புரொடக்ஷன்ஸ், லஜன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு தர்சிகன் தனு, படத்தொகுப்பு மற்றும் இசை சனோஜன், கலை மற்றும் வசனம் கோகிலன் திலகேஸ்வரன்.

பி.மோகன்ராஜ், டி ஷான், வஜந்தன், டிலக்ஷன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் கதையோட்டத்திற்கு இசை பக்கபலம். ஆனாலும், வசனங்களினூடு பின்னணி இசை அதிகமாக இருப்பது, படம் பேசும் வசனங்களை விளங்குவதில் சற்று சிரமமாக இருக்கின்றது.

சிறு சிறு மைனஸ்களைத் தவிர்த்து ஒரு நேர்த்தியான த்ரில்லர் குறும்படத்தைக் கொடுத்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.