நடிகர் ஜெறாட் நோயல் சகோதர மொழியில் அறிமுகமாகும் “முனிமா Beat” பாடல்

1083

கண்ணா உதய் இன் வரிகள், நடன அமைப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்த காணொளிப்பாடல் “முனிமா beat”. இந்தப் பாடலில் நடிகர் ஆர்.ஜே.நெலு, ஸ்ரீதேவி, யாழினி, ஜொனி உள்ளிட்ட ஏராளமான நடனக்கலைஞர்கள் நடித்திருந்தார்கள்.

பாடல் படமாக்கப்பட்ட விதம் மற்றும் காட்சியமைப்பில் பாராட்டுக்களைப் பெற்ற இப்பாடலிற்கான இசை பத்மயன் சிவா. ஒளிப்பதிவு ரிஷி செல்வம், படத்தொகுப்பு கதிர்.

இந்தப் பாடல் படமாக்கப்பட்ட போதே இதன் சிங்கள மொழி மூலமான பாடலுக்கும் தனியாக படப்பிடிப்பு இடம்பெற்றது. இப்பாடலில் ஈழத்தின் முன்னணி நடிகர் ஜெறாட் நோயல், நடிகை பிரணா ஆகியோர் நடித்திருந்ததுடன், தமிழ் மொழி மூலமான பாடலிலும் நடித்த ஸ்ரீதேவி, ஜொனி ஆகியோரும் நடித்திருந்தனர்.

ஈழ சினிமாவில் கடந்த 10 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கும் ஜெராட் 30 இற்கும் மேற்பட்ட குறும்படங்கள் மற்றும் காணொளிப் பாடல்களில் நடித்துள்ளதுடன், 4 முழு நீளத்திரைப்படத்திலும் (02 படங்களில் கதாநாயகனாக) நடித்துள்ளார். ஆனாலும், அவர் சகோதர மொழியில் நடிப்பதற்கான வாய்ப்பு இதுவரை அமையவில்லை. அந்தக் குறை இந்தப் பாடலில் தீரப்போகின்றது.

“முனிமா beat” சிங்களப் பாடலில் அவர் நடித்ததன் மூலம் சிங்கள சினிமாவிற்குள்ளும் அவரது அறிமுகம் நிகழப்போகின்றது. இதனை அவர் பெருமையுடன் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கிடப்பில் இருந்த இந்தப் பாடலைத் தூசு தட்டியுள்ளது பாடல் குழு. எதிர்வரும் ஓகஸ்ட் 02 ஆம் திகதி பாடல் யு-ரியூப்பில் வெளியாகவுள்ளது.