மழை நீர் சேமிப்பு குறித்து பேசும் விமல் ராஜின் “காக்கைக் குஞ்சுகள்” குறும்படம்

1095

ஐரோப்பிய யூனியன் தயாரிப்பில் யுனிசெப் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒஃபெர் சிலோன் ஊடாக தயாரிக்கப்பட்டிருக்கும் குறும்படம் “காக்கைக் குஞ்சுகள்”. இதனை பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக் காரனான குறும்பட இயக்குனர் விமல் ராஜ் இயக்கியுள்ளார்.

பபன்ஜா, கிறிஸ்தோபர், ஜெனிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு சசிகரன் யோ. இசை பத்மயன் சிவா. உதவி இயக்கம் – ஜொனாத்.

உவர்நீரை நிலக்கீழ் நீராகக் கொண்ட கரையோரப்பிரதேசங்களில் மழை நீர் சேகரிப்புத் திட்டம் தொடர்பிலான பிரசார படமாக இது உருவாக்கப்பட்டிருந்தாலும், அதற்கு நல்லதொரு திரைக்கதை அமைத்து தனது வசனங்களுடு செறிவூட்டி இயக்கியுள்ளார் இயக்குனர் விமல் ராஜ்.

அவரது முன்னைய படங்களின் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவம் இந்தக் குறும்படத்தின் பல இடங்களில் நன்றாகவே தெரிந்தது. ஒரு நேர்த்தியான மேக்கிங்கை இதில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

பிரதான நடிகர்கள் மற்றும் துணை நடிக, நடிகையர்கள் தங்கள் பாத்திரங்களை செவ்வனே செய்திருந்தார்கள். அதிலும் குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் தனது நடிப்பு மற்றும் குறும்புத்தனங்களுடு படத்தில் ஜொலித்திருக்கிறார்.

குறும்படம் படம்பிடிக்கப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் பல இடங்கள் கடந்த 5 வருடங்களுக்கு உள்ளேயே விடுவிக்கப்பட்டுள்ளன என்பதால், இக்குறும்படம் சொல்ல வரும் செய்தி மிகவும் அவசியமான ஒன்றாக இருப்பதுடன், அந்த இடத்தில் படப்பிடிப்பை நடத்தியதும் ரசிக்கும் படியாக உள்ளது.