சங்கீதா நடேசலிங்கத்தின் “கருவலி” குறும்படம்

1206

ஈழ சினிமாவில் பெண்களின் வருகையே மிக அரிதாக இருக்கும் நிலையில், புதிதாக இயக்குனர் அவதாரம் எடுத்து நம்பிக்கையுடன் களம் நுழைந்திருக்கின்றார் சங்கீதா நடேசலிங்கம்.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை பயின்ற அவர் தற்சமயம் ஆசிரியையாக கடமையாற்றினாலும், தான் கற்ற, தான் நேசிக்கும் சினிமாத்துறையில் ஒரு இயக்குனராக மிளிர வேண்டும் என்ற அவாவுடன் உருவாக்கியிருக்கும் முதல் குறும்படம் “கருவலி”.

இப்படத்தில் அஜய், பிரியா ஆகியோர் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்துள்ளதுடன், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்திருக்கின்றார் சசிகரன் யோ. இசை பகிர் மோகன். இக்குறும்படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை “படைப்பாளிகள் உலகம்” யு-ரியூப் பக்கத்தில் வெளிவரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

திரைத்துறைக்கு புதிதாக நுழைந்திருக்கும் பெண் இயக்குனர் சங்கீதா குறித்து, “கருவலி” படத்தில் நடித்த நடிகை பிரியா கீழ்க்கண்டவாறு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திரைத்துறையில் பெண்களின் வருகை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே இருப்பதற்கு காரணம், இத்துறை பெண்களுக்கு மிகவும் கடினமானதும், சவாலானதும் மட்டுமேயாகும்! அந்த வகையில், சங்கீதா நடேசலிங்கம், பெண் இயக்குனர்… யாருடைய ஆதரவுமோ, உதவியோ இல்லாமல், “இவளுக்கு என்ன தெரியும் என்று படம் எடுக்க வந்தவள்? இந்த படத்தையெல்லாம் யாரும் பார்ப்பார்களா?” என்ற ஏளன சொற்களையெல்லாம் தாண்டி இன்று தனது முதலாவது குறும் திரைப்படத்தை வெற்றி கரமாக முடித்து, வெளியீட்டுக்கு தயாராக வைத்துள்ளார். நாம் எமது ஆதரவினை பெண் இயக்குனருக்கு வழங்குவோம்!