ஊடகங்களிடம் கெஞ்சிக் கேட்கும் நிலையேற்பட்டுள்ளது – நடிகை நிரஞ்சனி கவலை

906

லைஞர்களுக்கும் கலைப்படைப்புக்களுக்குமான சமூக / ஊடகங்களின் ஆதரவு குறித்து தனது அண்மைய செவ்வி ஒன்றில் கருத்துத் தெரிவித்துள்ள நடிகை நிரஞ்சனி சண்முகராஜா, சில வேளைகளில் தன்னிலையில் இருந்து இறங்கி கெஞ்சிக் கேட்கும் நிலையும் ஏற்பட்டிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நிரஞ்சனி சண்முகராஜா. சிங்களம், தமிழ் என இரு மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்கள், குறும்படங்களில் நடித்துள்ள இவர் தொலைக்காட்சித் தொடர்கள், மேடை நாடகங்கள், விளம்பரப்படங்கள் என பலவற்றிலும் தொடர்ந்து நடித்து வருகின்றார். சிங்கள மொழியில் நடித்ததற்காக பல்வேறு விருதுகளையும் சுவீகரித்துள்ளார்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த “சுனாமி” படம் பலத்த வரவேற்பைப் பெற்றதுடன், கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படக்காட்சிகளும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், அப்படம் மீண்டும் வெளியிடப்படவுள்ளதாகவும் நிரஞ்சனி தெரிவித்துள்ளார். சிங்கள மொழியில் இரு படங்களில் நடித்துள்ளதுடன், தமிழில் மாதவன் இயக்கத்தில் “சொப்பன சுந்தரி” என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பதாக மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

“இலங்கைத் தமிழ் சமூக வலைத்தளங்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன?” என அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “இந்தியத் துறை சார்ந்த படைப்புக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவங்க எங்களுக்குக் கொடுக்கின்றாங்க இல்லை. நான் இன்று ஊடகத்துறை, சினிமா என ஓரளவு முன்னேற்றமான நிலையில் இருந்து கூட நானே சில சமூக / ஊடகங்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை இருக்கு. நாங்கள் கெஞ்ச வேண்டிய இடத்தில இல்லை. கெஞ்சவும் கூடாது. ஏன்னா, இத அவங்க ஒரு கடமையா செய்யணும். எங்கள் கலைஞர்களையும், எங்கள் படைப்புக்களையும் அவங்க மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற தெளிவு எங்கள் சமூக வலைத்தளங்களுக்கு இருக்கணும். இந்திய படைப்புக்களுக்கு கொடுக்கிற இடத்தில ஒரு இடத்தையாவது நம்ம படைப்புக்களுக்கு கொடுக்கணும். எனவே கொஞ்சம் உதவி பண்ணுங்க எண்டு தாழ்மையாக் கேக்கிறன்” என்றார்.

முன்னணி நடிகை நிரஞ்சனிக்கே இந்த நிலை இருக்கும் போது, இத்துறையினுள் இருக்கும் ஏனையவர்கள், புதிதாக நுழைபவர்கள் இன்னும் எவ்வளவு சவால்களை எதிர்கொள்வார்கள்? இந்திய படைப்புக்களுக்கு நம் நாட்டு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தின் சிறுபகுதியைக் கூட நமது படைப்புக்களுக்கு கொடுப்பதில்லை என்பது நம் கலைஞர்களின் நீண்ட கால குற்றச்சாட்டு. இந்த வரிசையில் சமூக ஊடகங்களும் இணைந்திருப்பது தான் துரதிஷ்டம்.

எம் கலைஞர்களையும், அவர்களது படைப்புக்களையும் வெளிக்கொணர்வதில் நம் நாட்டு கலைஞர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட குவியம் என்றும் முன்னின்று செயற்படும் என்பதை இந்த இடத்தில் உறுதியுடன் கூறிக்கொள்கின்றோம்.