விமல் ராஜின் “காக்கை குஞ்சுகள்” விழிப்புணர்வு குறுந்திரைப்படம் புங்குடுதீவில் காட்சிப்படுத்தப்படுகிறது.

729

விமல்ராஜ் அவர்களின் நெறியாள்கையில் உருவான “காக்கைக் குஞ்சுகள்” எனும் ஆவண, விழிப்புணர்வு குறும்படம் திரையிடலும் கலந்தாலோசிப்பும் வரும் வியாழன் (20-08-2020) மாலை 5:00 மணிக்கு பேராசிரியர். கார்த்திகேசு குகபாலன் தலைமையில் வட இலங்கை சர்வோதயம் புங்குடுதீவு வளாகத்தில் இடம்பெற உள்ளது.

இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் (உதயன் பத்திரிகை நிர்வாக பணிப்பாளர்)
திரு. மாணிக்கவாசகர் இளம்பிறையன் (யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்)
திரு. விந்தன் கனகரத்தினம் (முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்)
திரு. கருணாகரன் நாவலன் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்)
திரு. சுப்பிரமணியம் கருணாகரன் (மூத்த கூட்டுறவாளர் , முன்னாள் தலைவர் புங்குடுதீவு – நயினாதீவு பல நோக்கு கூட்டுறவு சங்கம்) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வு தொடர்பில் “படைப்பாளிகள் உலகம்” ஐங்கரன் கதிர்காமநாதன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, எம் மண்ணின் மிக முக்கிய தேவையான நன்னீர் உருவாக்கம் பற்றிய ஆவண விழிப்புணர்வு குறும்பட திரையிடலும், கருத்துப் பகிர்வும் கொண்ட இந்த நிகழ்வை சென்று சிறப்பிக்குமாறு பணிகின்றேன். எமது வடபகுதியில், மிக முக்கியமாக புங்குடுதீவில் நிலவுகின்ற நன்னீர் பிரச்சனைக்கு ஒரு முன்னெடுப்பாக இந்த நிகழ்வு அமைய இருப்பதால், அன்புறவுகள் அனைவரும் அங்கு சென்று, இந்த நிகழ்வில் பங்கெடுக்குமாறு உங்கள் மண்ணின் மைந்தனாக உங்களை வேண்டி நிற்கின்றேன்.

வாய்ப்புள்ளவர்கள் இந்த நிகழ்வுக்குச் சென்று தவறாது கலந்து கொள்ளுங்கள்.

ஐரோப்பிய யூனியன் தயாரிப்பில் யுனிசெப் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒஃபெர் சிலோன் ஊடாக தயாரிக்கப்பட்டிருக்கும் குறும்படம் “காக்கைக் குஞ்சுகள்”. இதனை பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக் காரனான குறும்பட இயக்குனர் விமல் ராஜ் இயக்கியுள்ளார்.

பபன்ஜா, கிறிஸ்தோபர், ஜெனிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு சசிகரன் யோ. இசை பத்மயன் சிவா. உதவி இயக்கம் – ஜொனாத்.