அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் வெளியிட்டு வைத்த “ஒற்றைச்சிறகு” முதற்பார்வை

1664

கிழக்கிலங்கையில் இருந்து தயாராகிவரும் முழு நீளத்திரைப்படம் “ஒற்றைச்சிறகு”. இதன் இயக்குனர் ஜனா மோகேந்திரன். அவருடனான நேர்காணல் ஒன்றை அண்மையில் குவியம் வாசகர்களுக்காக தந்திருந்தோம். இந்நிலையில், அப்படத்தின் முதற்பார்வையினை (first look) எங்கள் அன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று (22) வெளியிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ஈழத்துத் தமிழ்த் திரைப்படத் துறை” சார்ந்த முயற்சிகள், சிறிது காலம் தேங்கியிருந்தாலும் “டிஜிட்டல்” தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நம் நாட்டின் இளைய தலைமுறையினர் மத்தியில் ஒரு உத்வேகம் பிறந்துள்ளது.

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் தென்னியந்தியத் திரைப்படங்களுக்கு இணையாகத் தொழில்நுட்பத்தைக் கையாளக்கூடிய, தமது ஆற்றலை, குறும்படங்கள்,பாடல் தொகுப்புகள், மற்றும் முழுநீளத் திரைப்படங்களூடாகவும் வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த முயற்சிகளுக்குப் பெருமளவில் ஆதரவளிக்கவேண்டிய நமது ஊடகங்களைக் கூட எதிர்பார்த்துக் காத்திராமல், இணையத் தளத்தினூடாக உலகத்தின் எந்த மூலைக்கும் தமது படைப்புகளை எட்டச் செய்தும் வருகிறார்கள்.

தென்னிந்திய சினிமாச் செய்திகளுக்கே முக்கியத்துவம் தரும் நம்மவரது ஊடகங்களுக்கு மத்தியில் kuviyam.lk போன்ற ஊடகங்கள், நமது கலைஞர்களது படைப்புகள் பற்றிய செய்திகளுக்கே முக்கியத்துவம் அளித்துவருவதும் மகிழ்ச்சிக்குரியது. இந்த வரிசையில் திருக்கோணமலை “வெருகல்”கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள முழுநீளத் திரைப்படம்தான் “ஒற்றைச் சிறகு”.

மூன்று தினங்களுக்குள் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் நிறைவு செய்துவிட்டதாகக் கூறும், இத்திரைப்படத்தின் நெறியாளர் திரு. ஜனா மோஹேந்திரன், நம் நாட்டில் போராட்டம் நிறைந்த பெண்களது வாழ்க்கைச் சூழலை மைய்யமாக வைத்து, திரைக்கதையை அமைத்துள்ளதாகக் கூறுகிறார்.

ROHAD FILMS தயாரிப்பில் விதுசா, ஜனா ரவி, அகல்யா, திலக், கிருபா, குஜேந்தன், முரளி, பூர்விகா, கேனுரதன், ஆகியோர் நடிக்க அகல்யா டேவிட் ஒளிப்பதிவுப் பொறுப்பினை ஏற்க, கிஷாந்த் இசை அமைக்க உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் தொகுப்புப் பணிகளை அபிஷேக் செய்து வருகிறார். வண்ணக்கலவையை மேம்படுத்தும் பொறுப்பினை “கோமாளி கிங்ஸ்”புகழ் அஞ்சலோ ஜோன்ஸ்” ஏற்றுள்ளார்.

ஒரு திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பினை மக்கள் மத்தியில் முன்கூட்டியே உருவாக்க FIRST LOOK எனும் “முன் அறிமுகத்” தோற்றத்தினை வெளியிடும் இந்தியத் திரையுலக சம்பிரதாயத்தினை, இவர்களும் பின்பற்றி அதனை வெளியிடும் பொறுப்பினை ஏற்குமாறு என்னிடம் வேண்டியுள்ளார்கள்.

எமது கலைஞர்களது முயற்சிக்குக் கைகொடுக்கவேண்டியது நமது கடமை. எனவே ஒக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகவுள்ள “ஒற்றைச் சிறகு” எனும் நம்நாட்டுத் திரைப்படத்தின் “முன் அறிமுகத் தோற்றத்தினை” முதன்முதலாக, முகநூல் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். “ஒற்றைச் சிறகு” படக்குழுவினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.