NTFF விருது வென்ற “தமிழ்ச்செல்வி” குறும்படம் இந்த வாரம் வெளியீடு

936

கர்ணன் படைப்பகம் தயாரிப்பில் கனகநாயகம் வரோதயன் இயக்கத்தில் உருவான “நோர்வே தமிழ் திரைப்பட விழா” (NTFF 2019) விருது வென்ற “தமிழ்ச்செல்வி” குறும்படம் இந்த வாரம் இணையத்தில் வெளிவரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தக் குறும்படத்தில் சபேசன் சண்முகநாதன், மகேஸ்வரி ரட்ணம், லாரா, நிவி, பம்பல் தம்பிநாயகம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு நிஷாந்தன் ராஜகுலசிங்கம், படத்தொகுப்பு ஆர்.டி.ராஜ், இசை அருண் போல், கலை இளங்கோ ஜி.

சபேசனின் கதை,வசனம் மற்றும் தயாரிப்பில் உருவான இப்படத்தை திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார் கனகநாயகம் வரோதயன்.

“தமிழ்ச்செல்வி” குறும்படம் கடந்த வருடம் நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் திரையிடத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், இப்படத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்த சபேசன் சண்முகநாதனுக்கு சிறந்த துணை நடிகர் விருதும் கிடைத்தது.

அதன் பின்னதாக இவ்வருட ஆரம்பத்தில் லண்டனில் இக்குறும்படம் திரையிடப்பட்ட போது அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து வேறு சில நாடுகளிலும் இக்குறும்படத்தை திரையிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், கொரோனா தீவிரம் பெற்றதால் அது முடியாமல் போனது.

இந்நிலையில், “தமிழ்ச்செல்வி” குறும்படத்தினை எதிர்வரும் நாட்களில் யு-ரியூப்பில் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளதாக கர்ணன் கிரியேஷன் அறிவித்துள்ளது.