‘தமிழ்ச்செல்வி’ குறும்படம் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்?

698

‘கர்ணன் படைப்பகம்’ தயாரிப்பில் கனகநாயகம் வரோதயன் இயக்கத்தில் ‘தமிழ்ச்செல்வி’ குறும்படம் அண்மையில் யு-ரியூப்பில் வெளியாகியிருந்தது. இப்படம் பற்றி பேஸ்புக்கில் சிலர் தெரிவித்த கருத்துக்களை உங்களுக்காகத் தருகின்றோம்.

Velayutham Sarangan – இறுதி ஈழப்போரின் கொடுமையான முடிவுக்கு பின்பான தமிழர் வாழ்வின் சிதைவை இயன்ற வரை சித்தரிக்க முனைகிறது ‘தமிழ்ச்செல்வி’. அந்த 28 நிமிடங்களும் மிக கனதியானவை . திரைக்காட்சிகளின் நகர்வில் அவர்கள் உறவுகள் போலவே தொலைந்து போகின்றன நம் நிமிடங்களும் . நேர உணர்தல் இன்றி நகரும் திரை, திரைப்படமொன்றின் வெற்றி எனலாம் .

அரசியல், அகிம்சை என கட்டம் கட்டமாக நகர்ந்து மிகக்கட்டமைக்கப்பட்ட போரியலும் பயனற்றுப்போக, விடுதலை வேண்டும் ஒரு இனத்தின் அடுத்த நகர்வு பற்றி ஆழமாகவே பேசுகிறது குறும்படம். கதாநாயகனின் கடந்த நிலை வெளிப்படையாக அன்றி படிமப்படுத்தலூடாக வெளிப்படுத்தப்பட்டிருப்பின் படம் ஈழத்தில் பயமின்றிவெளிவரும் வாய்ப்புகளை அதிகரித்திருக்கலாம்.

அவ்வப்போது தோன்றும் சில காட்சி ஒருங்கமைப்பு தவறுகளை புறந்தள்ளினால் ‘தமிழ்ச்செல்வி’ கனதியான ஓர் படைப்பு எனலாம் . நிகழ்கால அரசியல்வாதிகள் மீதான எள்ளல் யதார்த்தமானது . சோகங்களும் அழுகுரல்களும் மன உடைவின் வெளிப்படுத்தல்களும் மனதை பாரமாக்கினாலும் என்னை ஏனோ கண்கலங்க வைத்தது ஈற்றில் வெளிப்படும் செல்வியின் கனவு .அது அழகான உச்சம் ! இன்னும் மெருகேறிய படைப்புகளை தர குறும்படகுழுவிற்கு வாழ்த்துக்கள் !

Ling Chinnaav – மலையகம் என்றால் ஒரு கதையும், யாழ்ப்பாணம் என்றால் ஒருக்கதையும் பிரதானமாக இருக்கும், அதற்க்குள் நிர்மானிக்கப்படும் திரைக்கதை என்பது யார் இயக்குநர் என்பதை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். இது நண்பர் வரோதயன் இயக்கியப்படம். தினம் நிகழும் ஒரு கதையை எப்படி இது ரொம்ப பழசு என்று சொல்வது? மகன் செத்துவிட்டான் என்பது வேறு காணாமல் போய்விட்டான் என்பது வேறுதானே!

முதலாமாவது ஒருவகையில் யதார்த்த நிம்மதி இரண்டாவது கதவை தட்டும் சத்தத்தில் மகனாக இருக்குமோ என்ற தவிப்பு காலக்கொடுமைதான். மண்டைக்குள் பீஸ் குத்துவதை நான் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். எடுக்கவும் முடியாமல் அதனோடு இசைந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நண்பனை தெரியும்.

தன் சமூகம் சார்ந்த கதையொன்றை தானே சொல்ல நினைப்பதென்பது கலைக்கு அப்பால் இருக்கும் ஏதோ ஒன்றுதான். படம் நல்லாருக்கு , ரைட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அவரவர் இது என் படம் என்று நினைத்தால் மட்டுமே இப்படியொன்றை எடுக்கமுடியும். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

Arjun – வசனங்களும் வாழிடங்களும் அழகோ அழகு. தமிழ்ச்செல்வி பேரழகு.. உண்மை தெரியாத பார்வையாளன் என்பதால் சில கண்ணீர் துளிகளுடன் ரசிக்கவே முடிந்தது..

கதை பாத்திரங்கள் அனைவரும் நல்ல பொருத்தம்.. டீச்சர் மிகப் பொருத்தம்.. அவர் எப்படி இருந்த மனிதர் தெரியுமா? என்று டீச்சர் கேட்டவுடன் திறக்கும் flashback காட்சி, அந்த சிறிய பாடல்.. பாட்ஷாவுக்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்ல..

வெற்றிலைக் கொடி.. கோள் மூட்டி கிழவன்.. நம்மூர் கிழவி… பனையோலை அடைச்ச வேலி.. வயல்வெளிகள்.. எல்லாம் அரைமணி நேரம் பால்யத்திற்கு அழைத்துச் சென்றது.. காட்சிப்படுத்தல் என்பதை கொஞ்சம் மெருகேத்திக்கலாம்.. ஒளிப்பதிவு, இடத்தேர்வுகள், அருமை..

அரைமணி நேரம் செலவழித்து.. பார்க்கலாம்.. ரசிக்கும் படியாகவும் , உணர்வுக்கு நெருக்கமாகவும் இருக்கும் கதை முடிவு.. வாழ்த்துக்கள் Varodhayan மற்றும் குழு. தமிழ்ச்செல்வி.. ஆஹா.. எத்தனை அழகான பெயர்!

Piratheep Atputha – இயக்குனர் Varodayan Kanaganayagam ஏந்தியிருக்கும் ஆயுதம்…. மீண்டெளுவோம் என்னும் நம்பிக்கையுடன்….. இலங்கைத்தமிழ் சமுதாயம் மீண்டெளும் நோக்குடன் ஆயுதம் ஏந்தியது அரை நூற்றாண்டுகளின் பின் அது தவறான முடிவென்று நினைத்திருக்குமோ…..???

இளையவர்களின் கைகளில் ஆயுதங்களை பிடுங்கிவிட்டு புத்தகங்களை கொடுங்கள் அதுவே மிகச்சிறந்த ஆயுதம்…..!!!!
Education is the most powerful weapon which you can use to change the world… #Nelson_Mandela

தேவதர்சன் சுகிந்தன் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது துயரை மையப்படுத்தி கர்ணன் கிரியேஷனால் தயாரிக்கப்பட்டு வரோதயன் இயக்கிய ‘தமிழ்செல்வி’ குறும்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஈழத்தின் வாழ்வியலை மையப்படுத்திய பல குறும்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் இதனை ஒன்றாக பார்த்தாலும் கூட எனக்கு இதன் கதைக்கரு மேல் ஓர் ஈர்ப்பு ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்ததற்கு காரணம் இருக்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை நடத்த ஆரம்பித்த காலப்பகுதியில் பல ஆதரவு, எதிர் நிலைப்பாடுகள் எழுந்திருந்தன. அவற்றை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பேசுபொருளாக மாற்றி அவர்களுக்கு ஏதோ ஒரு வகையிலான ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்திருந்தனர்.

இவ்விடயம் ஆதரிக்கப்படுவது அல்லது எதிர்க்கப்படுவது என்பதை தாண்டி இரு தரப்பினராலும் கைவிடப்பட்ட நிலையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கும் நிலை மிகவும் துயரமானது. நிச்சயமாக இந்த போராட்டங்கள் அல்லது போராட்டக்காரர்கள் அரசியலாக்கப்பட்டுள்ளன என்பது மறுப்பதற்கில்லை. பலர் பல குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் விலை போயுள்ளார்கள்.

ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி இன்னும் தனது உறவினர்கள் கிடைத்துவிட மாட்டார்களா என்ற அவாவுடன் போராடுபவர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலியை மையப்படுத்திய ‘தமிழ்செல்வி’ வெளிவந்திருக்கிறது. நிச்சயமாக இந்த திரைப்படத்தை ‘100 வீதம்’ என்று நான் சொல்லப்போவதில்லை. எனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத ஒரு சில விடயங்கள் இதில் உண்டு.

ஆனால் எடுத்துக்கொண்ட கதைக்களம், அதனை படமாக்குவதற்கான முயற்சிகள், குறைந்தளவிலான பணம் கொண்டு படம் பண்ணுவதற்கான சவால்கள் எல்லாவற்றையும் ஓரளவு அறிந்தவன் என்கின்ற வகையில், படக்குழு கர்ணன் படைப்பகம், Shanmuganathan Sabesan மற்றும் இதன் இயக்குனர் Varodayan Kanaganayagam பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஈழத்தின் வாழ்வியலை இங்கிருந்து படமாக்கி அதனை வெளியிடுவதற்கு எத்தனை தூரம் யோசிக்க வேண்டும் எத்தனை சவால்களை சந்திக்க வேண்டும் எனத் தெரிந்தும் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி காத்திரமானது. அடுத்தடுத்த படைப்புகள் இன்னும் இன்னும் அழுத்தமாக வெளிவரட்டும்.

நியூமன் பெனடிக்ற் – திரைக்கதை முதற்கொண்டு எல்லாவற்றிலும்,இன்னும் மினக்கட்டருக்கலாம். அந்த நடிகர் இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை, அல்லது மேக்கப்பில் பிரச்சனையோ தெரியவில்லை. இந்த ஸ்கிறீன் ப்ளேக்கு நீளம் மிக மிக அதிகமாக உள்ளதும் ஒரு தொந்தரவாக உள்ளது. முன்னேற இடமுண்டு. வாழ்த்துக்கள்

Suthes Pasupathy – கதைக் கரு பாராட்டக்கூடியது. ஆனாலும் காட்சிகள் மனதிற்கு ஒட்டவில்லை. காட்சிக் கோர்ப்பு முழுமையாக ஏமாற்றம். சில காட்சிகள் திடீரென்று குதிப்பதும் போவதுமாக உள்ளன. பிரதான பாத்திர தெரிவு தவறிவிட்டது. அழும் போது முகப்பாவனை சிரிப்பதைப் போல் உள்ளது. கால மாற்றத்திற்கேற்ப தோற்றத்தையும் மாற்றி இருக்கலாம்.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ” யார் இவர்” அது ஒரு தேவையில்லாத ஆணி. பேரரசுவின் வித்தைகளில் ஒன்று. படத்தின் நேரம் நீளமாக உள்ளது. “கல்வியே ஆயுதம்” கரு சிறப்பு ஆனாலும் எத்தனை படங்களில் போர் சாவு, செல் பீஸ், குண்டடி பார்ப்பது? திறமையுள்ள இயக்குனர் வரோதயன் வெளிய வந்து நிறைய செய்யலாம்.