கொழும்பில் மீண்டும் மாபெரும் இசைக் கொண்டாட்டம் (Back 2 Music)

517

AARAA Entertainment ஏற்பாட்டில் கொழும்பில் எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி ‘Back 2 Music’ என்ற பெயரில் மாபெரும் இசைக் கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு, விகாரமாதேவி திறந்த அரங்கில் மாலை ஆறு மணி முதல் இடம்பெறவுள்ள இந்த இசை நிகழ்வில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள், இசைக்குழுவினர், இணையவழி பிரபலங்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அந்தவகையில், இலங்கையிலும் சர்வதேச அரங்கிலும் தமது திறமைகளை வெளிப்படுத்திய புகழ்பெற்ற கலைஞர் சிவகுமார், நிலுக்ஷி, மஹிந்தகுமார், பிரேமானந்த், முபாரிஸ், முருகேஸ், செல்லத்துரை, ஸ்டான்லி, ரொக் நிஷா, இர்பான், கிருஷ்ணா, கலாவதி, முத்தழகு, நவகம்புர கணேஷ், சுலக்ஷன், ஸ்ரீவத்சலா, பிரசாந்தினி, ரோய் ஜக்சன், ரோஜா, இஷிதா, கோகுலன், பாத்திமா, லம்பிகாஷ்வினி, பிரகாஷ், ஆகியோருடன் கே.சுஜீவா மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றுள்ள இணையவழி மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களான யசோ, டீ கடை பசங்கஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்

அத்துடன், இந்நிகழ்வில் இசையமைப்பாளர்களாக புகழ்பெற்ற ரட்னதுரையின் ‘ரட்னம் அன்ட் பான்ட்’, எம்.மோகன்ராஜின் ‘அப்சராஸ்’, பிரபாவின் ‘ஸ்ருதி’ மற்றும் எம்.சிவகுமாரின் ‘அக்னி’ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் சகோதர சிங்கள மொழி மக்கள் மத்தியிலும் புகழ்பெற்ற அன்ரனி சுரேந்திராவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச நிலையை கருத்திற்கொண்டு, கொரோனா நெருக்கடியில் இருந்து முன்னேறி இயல்பு நிலைக்கு மக்கள் வந்துள்ள நிலையில், முடக்க நிலையின் பின்னராக சூழலில் முதன் முறையாக உள்நாட்டில் தமிழ் பேசும் கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்வாக இது நடைபெறவுள்ளது.

கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கத்தினால் இசைத் துறையும் நெருக்கடியான சூழலுக்கு முகங்கொடுத்துள்ளதால் இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த இசை நிகழ்ச்சி சுகாதாரத் தரப்பினரின் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின்படி நடத்தப்படவுள்ளதுடன் தொற்று நீக்கப்பட்ட அரங்கில் பார்வையாளர்கள் நிகழ்ச்சியை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.