ஆனந்த ரமணனின் “ஆறாம் நிலம்” கொழும்பில் திரையிடப்படுகின்றது.

807

IBC தமிழின் “குறுந்திரை” சீசன் 2 இன் வெற்றியாளர் ஆனந்த ரமணனின் இயக்கத்தில் உருவான “ஆறாம் நிலம்” முழு நீளத்திரைப்படம் எதிர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் கொழும்பு Goethe Institut இல் காண்பிக்கப்படவுள்ளது.

இரு தினங்களும் மாலை 6.00 மணிக்கு காண்பிக்கப்படவுள்ள இத்திரைப்படத்தைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. இதனை அனோமா ராஜகருணா நெறிப்படுத்தவுள்ளார். ஆசனங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முன்கூட்டியே பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.

“ஆறாம் நிலம்” குறும்படத்தை எழுதி, இயக்கியுள்ளார் ஆனந்த ரமணன். இதன் ஒளிப்பதிவு சிவ சாந்தகுமார். படத்தொகுப்பு சஜீத் ஜெயக்குமார். இசை சிந்தக ஜெயக்கொடி. காணாமல் போன தன் கணவரை தேடியலையும் அபலைப்பெண்ணாக இப்படத்தில் நடித்திருக்கின்றார் நவயுகா. மற்றுமொரு பிரதான பாத்திரத்தில் பிரான்ஸை சேர்ந்த மன்மதன் பாஸ்கி நடித்துள்ளார்.

இப்படத்தின் கொழும்பு வெளியீடு குறித்து மன்மதன் பாஸ்கி தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார். எனது திரைத்துறையில் நான் பிறந்த நாட்டில் நான் நடித்த முதலாவது முழுநீள திரைப்படம் ஈழத்தில் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தபோது சரியான நேரத்தில் சரியான படம் நடிக்க வேண்டும் என்று இருந்தேன் அதற்கு சான்றுதான் இவ் திரைப்படம் அந்த சந்தர்ப்பத்தை வழங்கிய இயக்குனர் Anantha Ramanan அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

“ஆறாம் நிலம்” படம் கடந்த வருடம் யாழில் திரையிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உலகளாவிய திரையிடலுக்கான ஏற்பாடுகள் நடந்த போது, கொரோனா அச்சுறுத்தலால் உலகமே முடங்கிப்போனது. இந்நிலையில், கொழும்பில் இப்படம் இம்மாத இறுதியில் திரையிட ஏற்பாடாகியுள்ளமை மகிழ்ச்சியான விடயமே!