‘முரளி 800’ – விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை நடிகர் அரவிந்தன்

685

இலங்கைக் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர், நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ‘முரளி 800’ என்ற படத்தினுடைய first look மற்றும் motion poster அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் முரளியின் வேடத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்புக்கள் நாலாபக்கமும் இருந்து எழுந்து வருகின்றன.

இந்நிலையில், அவருக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’ என்ற படத்தில் நடித்த இலங்கை நடிகர் அரவிந்தன் விஜய் சேதுபதிக்கான தனது ஆதரவு நிலைப்பாட்டை பேஸ்புக்கில் பதிந்துள்ளார். அதனை இந்தச் செய்தியில் இணைந்துள்ளோம்.

சுய விளம்பரத்துக்காகவும், அரசியல் இலாபத்திற்காகவும் தமிழ்/தமிழன் என்று பொய்யாக பொங்கும் சுயநலவாதிகளுக்கும், சினிமான்னா என்னன்னே தெரியாம சினிமாவைப் பற்றி விமர்சிக்கும் சில்லரைப்பசங்களுக்கும், தனிமனித உரிமையை என்றால் என்ன என்று தெரியாமல் ஒரு நல்ல கலைஞனின் அந்தரங்கத்தை நோண்டிப்பார்ப்பதுமற்றுமின்றி அட்வைஸ் பண்ணிக்கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு இந்த பதிவு…

ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த சக கலைஞன் என்பதைத் தாண்டி அதன்பின் அவருடன் ஒரு நண்பனாக பயணிக்க கிடைத்த சந்தர்ப்பத்தில் “நடிகனாக மட்டுமில்லாமல் நல்ல மனிதனாகவும்” மனதில் இடம் பிடித்தார் நம் “மக்கள்ச்செல்வன்”

சினிமா என்பது ஒரு Entertainment. அதில் பணிபுரியும் இயக்குனர்கள், நடிகர்கள் நாம் அனைவரும் Entertainers. ஒரு நல்ல சினிமா படம் வெளிவரும்போது, அதைப் பார்த்து மகிழ்பவன் ரசிகன். அதை வைத்து பணம் சம்பாதிப்பவன் வியாபாரி, அதைப் பற்றிய தன் கருத்துக்களை முன் வைப்பவன் விமர்சகன்….. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் வெளிவராத ஒரு சினிமாவைப் பற்றி, கதை என்னவென்றே தெரியாமல், படம் என்ன சொல்லப்போகிறது என்பதை அறியுமுன்னமே அதன் மீது வைக்கப்படும் விமரிசனங்கள் தேவயற்றவை. இருந்தாலும் விமர்சிப்பது தனி மனித கருத்துச் சுதந்திரம் என்று சொல்லலாம் அதை யாராலும் தடுக்க முடியாது.

ஆனால் அதில் நடிக்கவிருக்கும் விஜய்சேதுபதி அவர்களை அந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என்று கூறுவது தனிமனித சுதந்திரத்தை மீறும் செயலாகும். அதை யார் செய்தாலும் தவறு தவறுதான். இன்று அவர் மீது வைக்கப்படும் விமரிசனங்களும், அநாகரீகமான அழுத்தங்களும் ஒரு கலைஞனின் கைகளில் பூட்டடப்படும் கைவிலங்குகளாகும்.

800 திரைப்படத்தை இயக்கவிருக்கும் இயக்குனர் ஸ்ரீபதி அவர்களை 14-01-2020 அன்று சென்னையில் சந்தித்து பேசியபோது இத்திரைப்படம் பற்றியும் அதன் திரைக்கதை பற்றியும் கதாபாத்திரங்களின் தன்மை பற்றியும் விலாவாரியாகப் பேசிக்கொண்டோம். இயக்குனர் ஸ்ரீபதி மிகவும் திறமையான பணிவான மனிதர் என்பதை அன்று புரிந்து கொண்டேன். இத்திரைப்படம் வெளிவரும்போது இதைப்பற்றி நாம் இப்பொழுது முன்வைக்கும் கருத்துக்களும் விமர்சனங்களும் தவறானவை என்று படம் பார்க்கும்போது புரிந்து கொள்வோம்.

அதையும் தாண்டி முத்தையா முரளிதரனுடன் உங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளோ, பிரச்சினைகளோ அல்லது பொதுவான பிரச்சினைகளோ, பொதுவான கருத்து வேறுபாடுகளோ இருப்பின் அதை அவருடன் தீர்த்துக் கொள்ளவும். அதில் விஜய் சேதுபதி போன்ற ஒரு நல்ல கலைஞனுக்கு அழுத்தம் கொடுத்து உங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும் சிந்தனைகளையும் இலங்கை தமிழ் மக்கள் அனைவரது கருத்தாகவும், புலம்பெயர் தமிழர்கள் அனைவரது கருத்தாகவும் சித்தரிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

இச்சந்தர்ப்பத்தில் மரியாதைக்குரிய எழுத்தாளர் திரு. அருள்செழியன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் போட்டிருந்த ஒரு பதிவின் சிறுபகுதியை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.

“ஏற்கனவே இலங்கை தமிழர்கள் ஈழத்தமிழர், மலையகத் தமிழர், கொழும்பு தமிழர், தமிழ் முஸ்லிம்கள் என வழக்கம் போல பிரிந்தே நிற்கிறார்கள்.

நான் பார்த்த வரையில் ஒரு தமிழனை பாராட்டும் இன்னொரு இலங்கை தமிழனை நான் பார்த்ததேயில்லை.

பிகு: இலங்கை கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது டி ஷர்டில் அந்த நாட்டு கொடியைத்தானே வைக்க வேண்டும்… சென்னை இலங்கை தூதரகத்திலும் அந்த கொடிதானே பறக்கிறது. யாரும் தீ குளிக்கவில்லையே…”

மேற்கண்ட இப்பதிவினை வாசித்தபோது எனக்கு ஒரு தமிழ் தலைவன் கூறிய கூற்றை ஞாபகம் வருகின்றது

“ஊரான் குப்பையை அள்ளுவதற்கு முன் உன் வீட்டு குப்பையை அகற்றினால் உன் வீடு சுத்தமாகும்” ஆகவே நாறுவது புறம் அல்ல அகம்.

-அரவிந்தன்-