சமூகத்தின் கண்ணாடியாக கௌதமின் ‘மிரர் – Mirror’ குறும்படம்

868

SIGN_IN_Film_production தயாரிப்பில் கௌதம் இயக்கத்தில் வெளியாகியுள்ள குறும்படம் ‘மிரர்’. இதன் ஒளிப்பதிவு தெய்வேந்திரன் தேவ், படத்தொகுப்பு டினேஸ் பெர்ணான்டஸ், இசை அனுஷான் நாகேந்திரன். பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள் அப்துல்லா ரியாஸ், ரேஷ்மிதா மற்றும் குமரன் பிரின்ஸ்.

முழு உலகையும் புரட்டி எடுத்து வரும் கொரோனாவில் இருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களும் தம் மக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், சமூக இடைவெளிகளையும் வலியுறுத்துகின்றனர்.

கொவிட்19 என்கிற வைரஸ் வாய், மூக்கு துவாரங்களினூடாக இலகுவில் உடலின் உட்சென்றுவிடும் என்ற காரணத்திற்காக முகக்கவசம் (Face Mask) அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அந்த முகக்கவசத்தின் தேவையை உணர்த்தும் வகையில் கொரோனாவின் தாக்கத்தை மிகச்சரியாக பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு விழிப்புணர்வுக் குறும்படமாக உருவாக்கப்பட்டிருப்பது “மிரர்”.

இதன் இயக்குனர், நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவில் அநேகர் தமிழர்களாக இருக்கின்ற போதும், இது ஒரு பொதுப்பிரச்சனை, அதனால் பெரும்பான்மையாக சிங்கள சமூகம் வாழும் இந்நாட்டில் அவர்களுக்கும் இந்த விழிப்புணர்வை எடுத்துச் செல்லும் நோக்கில் சைகை உரையாடல் சிங்களத்திலும், உப தலைப்புக்கள் ஆங்கிலத்திலும் இருப்பதால் இது உலகளாவிய ரீதியில் அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு விழிப்புணர்வுப் படமாக உருப்பெற்றிருக்கின்றது.