‘ஆதலால் இங்கே வேண்டாம்’ – கிழக்கிலங்கையில் இருந்து ஒரு ‘வெப் சீரிஸ்’

732

மாறிவரும் உலகிற்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்; இல்லையேல் எங்களால் பிழைத்துக் கொள்ள முடியாது. இது கலைஞர்களுக்கும் பொருந்தும்!.

10 வருடங்களுக்கு முதல் இயக்குனர் சேரன் செய்ய நினைத்த C2D ஐ வெறுத்தவர்கள் இன்று OTT என்கின்ற தளத்திற்கு வந்து நிற்கின்றார்கள். நாளை சுப்பர் ஸ்டார்ஸ் படங்களும் இதில் ரிலீஸ் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றது கொவிட்-19.

2020 ஆம் ஆண்டைப்பொறுத்தவரையில் சினிமாவுக்கு மிக மோசமான ஆண்டு. கோடிகள் கொட்டிப்புரளும் இந்தியாவில் கூட கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு எந்தவொரு திரைப்படங்களும் உருப்படியாக திரையரங்குகளில் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஓ.டி.டி. தளங்களை சில இயக்குனர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். ‘ட்ரிபிள்ஸ்’, ‘பாவக்கதைகள்’ என சில வெப் சீரிஸ் பலரது வரவேற்பையும் பெற்று இன்னும் பலருக்கான வாய்ப்புக்களைத் திறந்திருக்கின்றது.

இலங்கையில் நம் கலைஞர்கள் சிலரது கவனமும் வெப் சீரிஸ் பக்கம் திரும்பியிருக்கின்றது. அந்த வகையில் கிழக்கிலங்கையில் இருந்து உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் தான் ‘ஆதலால் இங்கே வேண்டாம்’.

இது, இத்தாலி திரைப்படம் ஒன்றின் தழுவல் என ஆரம்பத்திலேயே படக்குழு குறிப்பிட்டு விடுகிறது. பிரதி வெள்ளி தோறும் அவர்களுடைய யு-ரியூப் பக்கத்தில் இந்த தொடர் ஒளிபரப்பப்படுகின்றது. அதனைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

BAD-DOT STUDIOS தயாரிப்பாக V.W.தர்மேந்திரா தயாரிக்கும் இந்த தொடரிற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் நண்பன் லோஜி. இயக்கியுள்ளார் ஜகொப் எல் ஜெரோஷான். ஒளிப்பதிவு தர்ஷன் மற்றும் மிதுன். படத்தொகுப்பு பிறேம். இசை பார்த்திபன், மேக் அப் கெடின்.

ஜெனா ஆர்ஜே, ராதி, சத்யா, சத்தியலிங்கம், நண்பன் லோஜி மற்றும் ரியூடெர் ஆகியோர் இதில் நடித்துள்ளார்கள். படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை இரண்டு பாகங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இந்தக் கலைஞர்களை எம் சினிமாவை நேசிக்கும் நீங்களும் ஆதரியுங்கள்.