திரைக்கலைஞர் பாலு மகேந்திராவிடம் இருந்து இளம் தலைமுறை கற்க வேண்டியவை எவை?– பதிலுரைக்கின்றார் பேராசான் மௌனகுரு

783

திரைக்கலைஞர் பாலு மகேந்திரா பெயரில் கிளிநொச்சியில் ஓர் நூலகமும் பயிற்சிக்கூடமும் கடந்த 27 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த தொடக்க நிகழ்வில் பல்வேறு ஆளுமைகள் காணொளித்தொழில்நுட்பம் வாயிலாக கலந்து கொண்டனர்.

அவ்வாறு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஈழத்தின் நாடக பேராசிரியர் சி.மௌனகுரு, குறித்த நூலகம் பற்றியும், பாலுமகேந்திராவுடனான தனது நினைவுகளையும் தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவற்றில் முக்கியமான சிலவற்றை உங்களுக்காக இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.

‘பாலு மகேந்திரா என் ஊரவர். எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் 300 அல்லது 400 யார் தூரம் தான் இடைவெளி. அவர் என்னை விட 4 வயது மூத்தவர். அவரை நாம் மகேந்திரன் அண்ணன் எனவே அழைப்போம். அவர் தந்தையார் பாலநாதன் புகழ் பெற்ற கணித ஆசிரியர். தந்தையின் பெயரைத் தன்னுடன் இணைத்து பாலு மகேந்திரா எனப்பெயர் வைத்துக்கொண்டார் மகேந்திரன். பின்னாளில் இந்த பாலு மகேந்திரா எனும் பெயரே நிலைத்து விட்டது..’

‘இந்த இளம் தலைமுறையினர் ஆர்வம் காரணமாக ஒரு சிறு வீட்டில் ஓர் நூல் நிலையம் ஆரம்பிக்கிறார்கள் என எண்ணி ஒப்புதல் தந்த எனக்கு அக்கலையகம் பற்றி அதன் தலைவர் ரம்மியா காட்சிகளுடன் நடத்திய அழகான அறிமுக உரையும் அதனூடாக வெளிப்பட்ட அக்கலையகத்தின் அமைப்பும் அங்கிருக்கும் நூல்கள், வீடியோக்கள் பற்றிய தகவல்களும் பெரு வியப்பையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தன.

அந்நூல் நிலையத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட இறுவட்டுகளும் பாலேந்திரா சேகரிப்பில் இருந்து அவர்கள் குடும்பத்தினர் கொடுத்த 2000 இறுவட்டுகளுமாக மொத்தம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறுவட்டுகள் இருக்கின்றன என அறிகிறேன். அத்தோடு பாலுமகேந்திரா குடும்பம் அளித்த அவர் வீட்டில் இருந்த 750 சினிமா சம்பந்தமான நூல்களும் ஈழத்து எழுத்தாளர்களின் 700க்கு மேற்பட்ட நூல்களும் அங்கு இருக்கின்றனஎன ரம்மியா கூறினார். இப்படி அதிகளவு இறுவட்டுகள் கொண்ட நூல் நிலையம் இலங்கையில் எங்கும் இல்லையென நினைக்கிறேன்.

ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு ‘பாலு மகேந்திரா நூலகம்’ ஆகும். அவர்கள் செயல் திட்டங்கள் அவர்களின் அதீத ஆசையை பெரும் கனவுகளைக் காட்டின. பல வகைகளில் இது எனக்கு ஓர் முக்கிய செயற்பாடாக, முன்னெடுப்பாக பட்டது.

அவையாவன,
1.மட்டக்களப்பிலே ஒரு சிறு கிராமத்தில் பிறந்த பாலு மகேந்திராவுக்கு, வன்னியில் கிளிநொச்சி எனும் கிராம நகரத்தில் ஓர் நினைவாலயமும் நூல் நிலையமும் அமைக்கப்படுவது, முக்கியமாக இக்காலகட்டச்சூழலில் வரவேற்கப்பட வேண்டிய மிகவும் ஓர் முக்கிய அம்சம்.

2.இதனை ஒழுங்கு செய்பவர்கள் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல், திரைப்பட அறிமுகம் பயின்று வெளியேறிவர்கள். அதிலும் மிகவும் இளம் தலை முறையினர், அதிலும் முக்கியமாகப் பெண்கள்.

3.இந்த ஆரம்ப விழாவுக்கு அவர்கள் ஈரானிய திரைப்பட நெறியாளர் மஜீத் மஜீதி, சிங்கள திரைப்பட நெறியாளர் பிரசன்ன விதானகே, தமிழ் திரைப்பட பட நெறியாளர் பாரதிராஜா போன்றோரையும்

4.உள்நாட்டின் திரைப்படத் துறையில் ஈடுபடும் ஞானதாஸ், சோமீதரன் விரிவுரையாளார் கலாநிதி ரகுராம் போன்றோரையும் அப்துல் ஹமீட், தாஸீசியஸ், தம்பிஐயா தேவதாஸ் போன்றோரையும் இன்னும் சிலரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தும் இருந்தனர். இது அவர்களின் இன, மொழி, நாடு கடந்த மிகப்பரந்த மனப்பான்மைக்கு அடையாளம்

5.இந்த இணைய கருத்தரங்கில் இணைய வந்திருந்தோரிடையே 80 வயதை அண்மிக்கும் முது வயதுக் கலைஞர்களும், 50 வயதினரான நடுவயதுக் கலைஞர்களும் 20 வயதினரான இளவயதுக் கலைஞர்களும் காணப்பட்டனர். இந்த தலைமுறை சங்கமம் இக்காலகட்டத்தில் மிக மிக முக்கியமானது.

கலைஞனை என்றும் இயக்குவது அவனது ஆழ்மன அனுபவங்களே! பாலு மகேந்திராவின் தந்தையார் பாலநாதன் ஒர் கல் வீடு கட்ட எடுத்த சிரமம், துயரம், துன்பம், அலைச்சல் என்பன இளம் பாலுமகேந்திராவின் அடி மனதில் ஆழப்பதிந்த ஒன்று. அந்த ஆழ்மன அனுபவமே அவரது ‘வீடு’ திரைப்படமானது.

எமது இருவரின் ஊரான அமிர்தகளி அங்கிருக்கும் மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் அதனது குளம் என்பன பிரசித்தமானவை. அந்த மாமாங்கக் குளத்தில் ஒருவர் மூழ்கி இறந்து விட்டார். அவரது உடல் வெளியே கிடத்தப்பட்டு இருந்தது. அதனை பார்க்க ஊரே கூடியது. மகேந்திர அண்ணரும் அதனை காண ஓடோடி வந்தார். அந்த உடலும் சூழலும் ஊரின் அழுகையும் அவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவ்வுடலை அவரும் நானும் சென்று அருகே இருந்து பார்த்தோம். அந்த சோகம் எம்மைக் கௌவியது. ‘எத்தனை கனவுகளுடன் இவர் இருந்திருப்பார்’ என அவர் கவலையுடன் கேட்டமையும் ஞாபகம் வருகிறது. அந்த அனுபவமும் மகேந்திர அண்ணரின் பாடசாலைப் பருவச் சேட்டைகளும் ‘அழியாத கோலம்’ எனும் திரைப்படத்தில் அழகாக வெளிப்பட்டது.

அவரது இளம் வாழ்வில் அவரது வாலிப வாழ்வில் குறுக்கிட்ட பெண்கள் அதன் காரணமாக எழுந்த ஆண், பெண் உறவுகள் – முரண்பாடுகள் என்பன அவரது பல படங்களில் வெளிப்பட்டன. அவற்றை அவரது படங்களோடு இணைத்துப் பார்ப்பது அவரைப் புரிந்துகொள்ள உதவும்.

அவர் பல திறன்கள் கொண்டவர். இப்பல் திறன் ஆற்றலே அவரை அவர் துறையில் பலரும் வியக்கும் மனிதராக்கியது. தனது வேகத்திற்கு இலங்கையில் இடம் இல்லை எனவும் திரைப்படத் துறையில் அதிகம் அறிய வேண்டும் எனவும் எண்ணிய அவர் இலங்கை விட்டகன்றார்.

வெளிநாட்டில் பட்டம் பெற்றார், பூனா திரைபடக் கல்லூரியில் முறையாக திரைப்படம் பயின்றார். அத்துறையில் தொழிநுட்பத்தேர்ச்சி பெற்ற பின்னரேயே அத்துறையில் இறங்கினார். இந்த திறமைகள், அர்ப்பணிப்பு, தேடல், ஈடுபாடு அவரிடமிருந்து இன்று சினிமா செய்யப் புறப்படும் இளம் தலைமுறை கற்க வேண்டியவை.

தன் காலத்துக்குள் பல மாற்றங்களைக் கண்டவர் அவர். தமிழர் சமூக அமைப்பில், அரசியலில், போராட்டங்களில், பொருளாதாரம் மாறியதில், தொழில் நுட்ப முன்னேற்றத்தில் எல்லாம் தீவிர மாற்றங்களைக் கண்டார். அவற்றைப் புரிந்து கொண்டார். உள் வாங்கிக்கொண்டார். இவற்றையெல்லாம் உள்வாங்கி வளர்ந்த அவர் கடைசியாக நடித்த படம் ‘தலைமுறைகள்’.

தாத்தா பேரன் உறவுக்கதை அது. அழியாத கோலங்களில் விடலை பெடியனாக உலகை பார்த்த அவர் தலைமுறைகளில் 70 வயது கடந்த தாத்தாவாக உலகைப்பார்க்கிறார். இப்பார்வைகளை அவருக்கு அவரது உலக அனுபவமும் நூல் வாசிப்பும் அளித்துள்ளன. ஆரம்பத்தில் இலங்கைச் சினிமா உலகும் பின்னர் தென்னிந்திய திரைப்பட உலகும் கவனிக்காது விடப்பட்ட இவரே பின்னால் கொண்டாடவும் பட்டார்!!

அத்தோடு திரைப்படத்துறையில் 4 தேசிய விருதுகளும் 3 மாநில விருதுகளும் 2 ஃபிலிம் பேர் விருதுகளும் 2 நந்தி விருதுகளும் பெற்றார். அவர் ஓர் தலைமுறையையும் உருவாக்கியுள்ளார். இயக்குனர் பாலா, ஒளிப்பதிவாளர் சந்தோஸ் சிவன் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள். அதன் பின்னால் அவரின் வழியில் இன்று பலர் உருவாகியுள்ளார்கள்.

அவரிடமிருந்து இளம் தலைமுறை கற்க வேண்டியவை இவை:

  1. சுய கற்றல் (இது அவரது 5 வயது தொடக்கம் 15 வரை நடந்தது)
  2. தேடிக்கற்றல் (இது அவரது 20 வயது தொடக்கம் 25 வரை நடந்தது)
  3. முறையாகக் கற்றல் (இது அவரது 25 வயது தொடக்கம் 30 வரை நடந்தது)
  4. தனது வாழ்வனுபவங்களை படமாக்குதல் (இது அவரது 30 வயது தொடக்கம் 60 வயது வரை நடந்தது)
  5. வாழ்வனுபவம், அறிவு மூலம் ஓர் ஞானியாக பரிணமித்தல் (இது அவரது 70 வயதுக்கு பிறகு நடந்தது)

ஒரு கலையில் ஈடுபடும் ஓர் கலைஞனின் அதி உயர் நிலை அதுவாகவே மாறி ஒர் பற்றற்ற நிலை எய்துதல் என்பர் அறிஞர். பாலுமகேந்திரா அண்ணரை நினைக்கையில் இவ்வாக்கியமே ஞாபகம் வருகிறது. வாழும் வரை கற்க வேண்டும் என்ற படிப்பினை அவரிடமிருந்து இத்தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும்.

படிப்பு, கற்றல் என்பன இந்த இளம் தலை முறை வைத்திருக்கும் வெற்றுப்பானையை மிகவும் நிறைக்கும். அதாவது அவர்கள் சட்டி நிறையும். ‘சட்டியிலிருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. இளம் தலைமுறை அதி உயர் தொழிநுட்பம் எனும் தங்க அகப்பை வைத்திருந்தாலும் தங்கச்சட்டி வைத்திருந்தாலும் சட்டியில் எதுவும் இல்லாது விடின் எதனைப் பரிமாறுவார்கள்? நிறைந்த பல்துறை வாசிப்பாலும் சிந்தனையாலும் வாழ்பனுவங்களாலும் விமர்சன சிந்தனையாலும் இளம் தலைமுறை ஆர்வலர்களின் சட்டி நிறைவதாக…

பாலு மகேந்திரா நூலகம் பற்றி அறிந்து கொள்ள இந்த இணைப்பினை கிளிக் செய்யுங்கள்.