சிவி லக்ஸ் இன் ‘CVL 06’ ஒலிப்பதிவுக்கூடம் யாழில் திறந்து வைப்பு

820

சொல்லிசைக் கலைஞன், இசையமைப்பாளர் சிவி லக்ஸ் இன் ‘CVL 06’ ஒலிப்பதிவுக்கூடம் யாழில் நேற்று (01) புதுவருடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தேசிய லொத்தர் சபையின் முகாமையாளர் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி) சிவராஜா பாரதன் தலைமையில் இடம்பெற்ற கலையகத் திறப்பு விழாவில் யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மையூரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு, நாடா வெட்டி ஒலிப்பதிவுக்கூடத்தினை திறந்து வைத்தனர். யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.

இசையமைப்பாளர் சிவா பத்மயன், பூவன் மதீசன், இயக்குனர் சிவராஜ், ஒளிப்பதிவாளர் ரெஜி செல்வராஜா, ஒளிப்பதிவாளர் ஷரத் உள்ளிட்ட சினிமா துறை சார்ந்தவர்களுடன் பலரும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்றிருந்தமை சிறப்பம்சம்.

அத்துடன், சிவி இன் புதிய பாடலான ‘சொல்லிசை பொடியன் 2.0’ காணொளிப்பாடல் இறுவெட்டும் நேற்று சிறப்பு அதிதிகளால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து சிவி லக்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘எனது இசைப்பயணத்தின் மிக முக்கியமான நாள், நீண்ட காலமாக கனவாகவே இருந்த ஒலிப்பதிவுக்கூடம் இன்று காட்சியாகியுள்ளது. இந்த கனவை நனவாக்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மற்றும் இந்நிகழ்விற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்’ என தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.