இசையிலும் இயக்கத்திலும் அசர வைத்த சங்கீர்த்தன் – A Beautiful Sunday

1187

I CAN Studios உடன் இணைந்து Jaffna Zero Budjet Films தயாரித்திருக்கும் பாடல் ‘A Beautiful Sunday’. இன்று (03) காலை வெளியான இந்தப் பாடல் வெகுவான பாராட்டுதலுக்கு உரியது. பல விதத்திலும் வித்தியாசமானது. அவை என்னவென்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

இந்தப் பாடலை இசையமைத்துப் பாடியதுடன், அழகாக அதனைப் படமாக்கியும் (இயக்கம்) இருக்கின்றார் சங்கீர்த்தன். அவருடன் இணைந்து துவாரகி டயஸ் கஜானன் பிரதீஸ் ஆகியோரும் பாடியுள்ளனர். பாடல் வரிகள் மகிழ்நன் சிவா.

காணொளிப்பாடலின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் VFX சைரஜன். கலை இயக்கம் சபாஸ்கரன், நடன இயக்கம் சாய் ஜெகா. மேக்-அப் குமார். பாடல் ஒலிக்கலவை பத்மயன் சிவா. காணொளிப்பாடலில் நடித்திருக்கின்றார்கள் மியூலின், மதுரா, நிரஞ்ஜன், டயஸ், பிரதீஸ், கஜானன் மற்றும் சங்கீர்த்தன்.

பாடலைப் பார்த்ததுமே ‘அட!’ போட வைத்தது. இது ஒட்டுமொத்த டீமுக்குமான பாராட்டு. அண்மையில் ஒரு ‘டீம் வேர்க்’ உச்சபட்சம் வெளிப்பட்ட ஒரு படைப்பாக இதனைச் சொல்லலாம். எங்கள் சினிமாவில் மாதத்தில் இரண்டு பாடல்கள் வீதம் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் சில மட்டுமே முத்தாய்ப்பாய் அமையும். அப்படி முத்தான பாடல் இது.

அழகான இசையா? அதற்கு உயிர் கொடுத்த குரல்களா? அதை மேலும் அழகாக்கிய நடனமா? கண்களுக்கு விருந்தளித்த கலை இயக்கமா? எல்லாமே அசத்தலாக இருக்கும் போது எதைப்பாராட்டுவது என்பதிலும் குழப்பமாகவே இருக்கின்றது.

குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டியது ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு. இரண்டையுமே ஒருவர் (சைரஜன்) செய்திருப்பது மிகச்சிறப்பு. காணொளிப்பாடலில் வழமையாக வருகின்ற பல குறைகளை தனது துள்ளியமான படத்தொகுப்பால் கண்களில் இருந்து மறைத்து விருந்து படைத்திருக்கின்றார். சில காட்சிகளை ஒரே ‘ஷொட்’டில் எடுத்திருப்பது எங்கள் சினிமாவுக்கு புதுமை.

இந்தப் பாடலை ‘கலர்ஃபுள்’ கொண்டாட்டமாக்கியது பிரியன் அருளின் லைட்டிங் டெக்னிக் என்றால் அது மிகையாகாது. கலை இயக்குனருடன் சேர்ந்து ஒரு வித்தை புரிந்திருக்கின்றார் தன் பங்கிற்கு..

எங்கள் சினிமா இப்பொழுது தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது. எனவே, ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும் அதைப்பெரிதாக யாருமே கண்டுகொள்வதில்லை. ஆனால், இதில் குறை என்று சொல்வதற்கே ஒன்றும் இல்லை. இன்னும் சொல்வதானால் நாங்கள் எதிர்பார்க்காததையும் சாத்தியமாக்கி இருக்கின்றார்கள்.

இந்த பாடலில் பணியாற்றிய சங்கீர்த்தன், சைரஜன் போன்றவர்களது அண்மைய படைப்புக்களை எடுத்து நோக்கினால், அதில் அவர்கள் ‘நண்பர்கள்’ குழுக்களாக சேர்ந்து இயங்குவது தெரிகின்றது. அது சினிமாவிற்கு ஆரோக்கியமானதும் கூட. குறித்த பாடலின் கீழ் (youtube) பலர் தெரிவித்திருக்கும் கருத்துக்களும், அவர்களது நட்பு வட்டம் பெரியது என்பதைக் காட்டுவதுடன், அனைவரும் பாகுபாடில்லாமல் ஊக்குவிக்கின்றார்கள் என்பதையும் காட்டுகின்றது.

ஒன்றிணைவு மூலமே எங்கள் சினிமாவில் வெற்றிகளைச் சாத்தியமாக்கலாம். கண்களுக்கும் காதுகளுக்கும் நிறைவான விருந்தைத் தந்த சங்கீர்த்தன் குழுவினருக்கு எமது மனம் நிறைந்த பாராட்டுக்கள். பாடலோடு நின்றுவிடாது உங்கள் முயற்சிகள் சினிமாவின் ஏனைய கட்டங்களிலும் தொடரட்டும்.