ஈழத்தின் மூத்த இயக்குனர் கேசவராஜன் காலமானார்

328

ஈழத்தின் மூத்த திரைப்பட இயக்குனரும், தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவை சேந்தவருமான நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் இன்று (09.01.2021) சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

அரியாலை மத்தியைச் சேர்ந்த இவர் தற்காலிகமாக சுதுமலை, மானிப்பாயில் வசித்து வந்தார். ஈழத்திரைப்பட இயக்குனரான இவர் 1986ஆம் ஆண்டு ‘தாயகமே தாகம்’, ‘மரணம் வாழ்வின் முடிவல்ல’ போன்ற படங்களை இயக்கினார். அதன் விளைவாக தேசிய தலைவரின் பாராட்டை பெற்றதுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டார். பல வீதி நாடகங்கள், மேடை நாடகங்களை தயாரித்து வழங்கிய இவர் பிஞ்சுமனம், திசைகள் வெளிக்கும், கடற்புலிகளின் 10ஆண்டு நிறைவை முன்னிட்டு கடலோரகாற்று, அம்மா நலமா போன்ற படங்களை இயக்கியுள்ளதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்தும் ‘அப்பா வருவார்’ போன்ற பல குறும்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.

இறுதியாக, நீண்ட போராட்டத்துடன் ‘பனைமரக்காடு’ திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இப்படம் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் சில நாடுகளில் திரையிடப்பட்டது. இதற்காக ஐரோப்பாவிற்கான பயணம் ஒன்றையும் கடந்த 2018 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்தார்.

தொடர்ச்சியாக ‘எமக்கான சினிமா’, ‘ஈழ சினிமா’ போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதுடன் இளம் சினிமா முயற்சியாளர்களையும் அதன் பால் ஈர்க்கச் செய்த வழிகாட்டி. எமக்கான சினிமா எனும் கனவுடன் இயங்கிய ஒப்பற்ற கலைஞர் இவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.