சமஷ்டி எங்கள் கனவு; அந்த தேசம் அமைந்தால் புட்டுத்தானே ‘தேசிய உணவு’ : உமாகரன் ராசையாவின் புட்டுப்பாடல்

2247

தவகுலநாதன் சிவேந்தன் மற்றும் சி.மதன் ஆகியோரின் தயாரிப்பில் ‘வெற்றி விநாயகன்’ வழங்கியுள்ள பாடல் ‘தேசிய உணவு’ (புட்டுப்பாடல்).

கடந்த மாவீரர் தின நினைவேந்தல் வாரத்தின் போது ‘புட்டு’ என்கின்ற விடயம் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கானது. பொதுவாகவே ஈழத்தமிழர் வாழ்வியலில் ‘புட்டு’ தேசிய உணவாகவே பார்க்கப்படுகின்றது. அதிலும் யாழ்ப்பாணத்தில் ஒருவேளை உணவாக தினமும் புட்டு முக்கிய இடம்பிடிக்கும். அப்பேர்ப்பட்ட புட்டை கேலியாக்க முனைந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரால் ‘புட்டு’ ட்ரெண்டிங்கானது.

எனவே, அதன் முக்கியத்துவத்தை வைத்து சில பாடல்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில், கடந்த பொங்கல் வெளியீடாக உமாகரன் ராசையாவின் வரிகளில் உருவான இந்தப் பாடல் வெளியாகியது. இது முன்னைய பாடல்களில் இருந்து எவ்வாறு வித்தியாசப்படுகின்றது என்பதை பார்க்கலாம்.

கவிஞர் உமாகரன் ராசையா, தன் கவித்துவமான வரிகளால் ‘புட்டை’ உணர்வாக்கியுள்ளார். எங்கள் வாழ்வியலில் புட்டின் முக்கியத்துவத்தையும், புட்டின் வகைகளையும், அதனை உண்ணும் முறைகளையும் அழகாக, ரசிக்கும் படி எழுதியுள்ளார். புட்டு உண்ணும் எங்களுக்கெல்லாம் அவை மிக நெருங்கிய வரிகளாகின.

முக்கியமாக ‘சாதி, சமயம் எண்டு பிரிஞ்சு கிடந்த தமிழன் புட்டு எண்ட விசயத்தில ஒண்டா இணைஞ்சான்’, ‘சமஷ்டி எங்கள் கனவு; அந்த தேசம் அமைஞ்சால் பிட்டு தானே தேசிய உணவு’, ‘புட்டவிக்க தெரிஞ்ச பிள்ளை இருந்தால் சீதனமே வேண்டாம்’, ‘புட்டு உணவில்லை உணர்வாகி போட்டு’… என்ற வரிகள் எல்லாம் அருமை.

இந்தப் பாடலுக்கு அருமையாக இசையமைத்துள்ளார் வெற்றி சிந்துஜன். வரிகளுக்கு உயிர் கொடுத்து பாடியுள்ளார் ராம் ரமணன்.

இன்னுமொரு விடயம் பாடலின் அருமையான காட்சியமைப்பு. ஜீவராஜின் ஒளிப்பதிவு மற்றும் ஒளித்தொகுப்பில் பாடலை அழகு கெடாமல் இயக்கியிருக்கின்றார் வாகீஸ்பரன் இராசையா. பாடலில் தோன்றி நடித்து, ஆட்டம் போட்ட ஊரெழு பகி மற்றும் ஆத்விக் பாராட்டுக்குரியவர்கள்.