உண்மையான அன்பைப் பேசும் ஜோயலின் ‘மௌவை’ குறும்படம்

899

எங்களைச் சுற்றி எவ்வளவோ பேர் இருக்கிறாங்க. ஆனால், யார் உண்மையான அன்பை எங்க மேல செலுத்துறாங்க? என்ற கேள்விக்கு ஒரே பதில் தான். அந்தப் பதிலை தன் ‘மௌவை’ குறும்படம் ஊடாகத் தந்திருக்கின்றார் இயக்குனர் ஜோயல்.

விதூன் கோபால் தயாரிப்பிலும், கிரிஸ்காந்தின் இணைத்தயாரிப்பிலும் உருவாகியுள்ள இக்குறும்படத்தில் ஆதி டிரு, திலகா அழகு, டரில் டியுக், திவ்யா நிலா ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

ஒளிப்பதிவு கிரிஸ்காந்த், படத்தொகுப்பு எஸ்.என்.விஷ்ணுஜன், இசை மற்றும் ஒலிக்கலவை கேஷாந்த் குலேந்திரன், வர்ணம் மற்றும் வடிவமைப்பு பா.அஜிந்திரபிரசாத், பாடல் வரிகள் கவிஞர் வியன்சீர், பாடியவர் கு.இராகுலன். தயாரிப்பு நிர்வாகம் எஸ்.என்.விஷ்ணுஜன்.

‘உண்மையான பாசத்தை யாருமே புரிஞ்சு கொள்றது இல்லை’, ‘எப்பவுமே ஒரு விசயம் அருகில் இருக்கும் போது புரியாது; இல்லாத போது தான் புரியும்’ போன்ற நச்சென்ற ஒரு சில வசனங்கள் குறும்படத்தில் இருக்கின்றன. கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் அதன் உண்மைத் தன்மை புரியும்.

‘காதல் கண்ணை மறைக்கும்’ என்பார்கள். அப்படித்தான், அந்த நேரத்தில் நம்மைப் பெற்றவர்களைக் கூட நாம் மறந்து போவோம். சில காதல்கள் நிறைவேறும். எத்தனையோ காதல்கள் நிறைவேறாமல் போகும். அந்த நிறைவேறாத காதலுக்காக நாங்கள் கொடுத்த வெகுமானம் பணமாக இருந்தால் மீளப்பெற்று விடலாம். ஆனால், பொன்னான நேரத்தை அல்லவா நாங்கள் செலழித்துவிட்டோம் என உணரும் போது ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்ற பழமொழி தான் ஞாபகத்திற்கு வரும்.

ஏழு நிமிடத்தில் அழகாக காதலையும், அன்பையும் சொல்லிப் போகின்றார்கள் ‘மௌவை’ படக்குழுவினர். நடிப்பு மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் என அனைத்துமே அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு.