ஈழத்து நடிகை மதுமதி அறிமுகமாகும் ஹலீதா ஷமீமின் ‘ஏலே’ – ரிலீஸ் திகதி அறிவிப்பு

525

‘சில்லுக்கருப்பட்டி’ படத்தின் இயக்குனர் ஹலீதா ஷமீம் அடுத்ததாக இயக்கி உள்ள ‘ஏலே’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஈழத்து நடிகை மதுமதி பத்மநாதன் நாயகியாக அறிமுகமாகின்றார்.

‘வா குவாட்டர் கட்டிங்’ மற்றும் ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களை இயக்கிய புஷ்கர் காயத்ரியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் ஹலீதா ஷமீம். இவர் ‘பூவரசம் பீபீ’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் இவர் இயக்கத்தில் வெளியான ‘சில்லுக்கருப்பட்டி’ எனும் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதையடுத்து அவர் இயக்கியுள்ள படம் தான் ‘ஏலே’. சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை எஸ்.சசிகாந்துடன் இணைந்து புஷ்கர் காயத்ரியும் தயாரித்துள்ளனர். அவர்கள் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.

நேற்று (26) இந்திய குடியரசு தினத்தன்று வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மூலம் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த நடிகை மதுமதி அறிமுகமாகின்றார். இது எம்மவர்கள் எல்லோரும் பெருமை கொள்ளக்கூடிய தருணமாகும். அவர் ஏற்கனவே அசோக் செல்வனுடன் ‘ரம்’ படத்தில் நடித்திருந்தாலும், முதலில் வெளிவரும் படமாக ‘ஏலே’ அமைகின்றது. அந்த வகையில் சிறப்பான அறிமுகத்தை அவருக்கு தென்னிந்திய சினிமாவில் இப்படம் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்க எம்மவர்கள் பலர் தொடர்ந்தும் முயன்றாலும் அவர்களில் சிலரின் முயற்சி மட்டுமே வெற்றி அளிக்கிறது. அந்த வகையில், மதுமதியின் முயற்சி இன்று வெற்றி பெற்றிருக்கின்றது. அவர் நாளை சிகரம் தொட குவியத்தின் சார்பில் நாங்களும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.