கொரோனாவின் மறுபக்கத்தைக் காட்டும் ‘DARK SHADOW’ குறும்படம்

646

எஸ்.கவிநாத் இயக்கத்தில் அண்மையில் வெளியாகியுள்ள குறும்படம் ‘DARK SHADOW’. இதில் சனாதனன் பிரதான பாத்திரமேற்று நடித்திருக்கின்றார்.

ஒளிப்பதிவு கே.எஸ்.பிரபு, படத்தொகுப்பு தனுசாந்தன் ஹரி, இசை Terranzov, உதவி இயக்கம் பிரபா மோகன்ராஜ், டிசைன் சதீஸ்.

கொரோனா சூழ்நிலை உலகளாவிய ரீதியில் பலரையும் பல விதத்தில் பாதித்திருக்கின்றது. பெரிய பெரிய நிறுவனங்களே வருமானம் இல்லாமல் ஆட்டம் கண்டிருக்கின்றன. இந்த சுழலில், நாளாந்தம் உழைத்துச் சாப்பிடும் பல குடும்பங்களின் நிலை என்னவாகும்?

அப்படி ஒரு விடயத்தைத் தான் இவர்கள் படமாக்கியிருக்கின்றார்கள். எடுத்துக் கொண்ட கதைக் கரு நன்று. ஆனால், அதனை படமாக்கும் விதத்தில் கோட்டை விட்டுவிட்டார்களோ? என எண்ணத் தோன்றுகிறது.

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களில், ஆட்டம், பாட்டம் என ஜாலியாக இருப்பதையும், அறைக்கு 03, 04 பேர் என சேர்ந்திருப்பதையும் சமூக வலைத்தளங்கள் மூலம் பார்த்து அறியக்கூடியதாக இருக்கும் நிலையில், இப்படி தனியாக ஒருவரை அடைத்து வைப்பது, அதுவும் வெளி உலகம் தெரியாதவாறு என்னதெல்லாம் கொஞ்சம் லாஜிக் ஓட்டைகள்.

எடுத்துக் கொண்ட கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். தொழில்நுட்ப ரீதியில் குறும்படம் நன்றாகவே இருக்கின்றது. அதில் நடித்தவரும் சிறப்பாகவே தனது பணியைச் செய்திருக்கின்றார்.