‘கார்குழலி’ – அடேங்கப்பா! ஒரு பாடலுக்குள் இத்தனை ஆச்சரியங்களா?

953

கே.எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் கதிரின் இயக்கத்தில் அலெக்ஸ் கோபியின் ஒளிப்பதிவில் கதிரின் படத்தொகுப்பில் பத்மயனின் இசையில் இன்று (18) வெளிவந்துள்ள பாடல் ‘கார்குழலி’.

இந்தப் பாடலை குவேந்திரன் கணேசலிங்கம் எழுதியுள்ளார். பத்மயனுடன் இணைந்து பைரவி பாடியுள்ளார். பாடலில் மதிசுதா, கீர்த்தி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களாக தோன்றி நடித்துள்ளார்கள்.

போர்க்காலத்தில் நிகழ்ந்த காதல் என்பது தான் பாடலின் அடி நாதம். அதாவது மின்சாரம் இல்லாத 95 இற்கு முந்திய ‘யாழ்ப்பாணக் காதல்’ என்றும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது போர் நிலவிய காலப்பகுதியில் தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த காதல் என்றும் கொள்ளலாம், அதிலும் குறிப்பாக 2000 இற்கு முந்தியது என்பது பொருத்தமாக இருக்கும்.

பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் பாடலை. பாடல் காட்சிப்படுத்திய விதம் கொள்ளை அழகு. பாடலுக்கு பயன்படுத்தி வர்ணம் மற்றும் காட்சிகள் பார்ப்போரை 80 – 90களுக்கு அழைத்துச் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

வயலின் நடுவே ஒற்றைக் கிணறு, கிடுகு வேலிகள், செவ்வரத்தம் பூ, முட்செடியுடன் காதல் பேசுதல், கடிதங்களின் ஊடு காதலைப் பேசுதல், ஜெனரேட்டரில் படம் பார்த்தல் என காட்சிக்கு காட்சி எங்களை பழைய நினைவுகளுக்கே அழைத்துச் செல்கிறார்கள் இந்த பாடலின் ‘இளங்கூட்டணி’. பாடலின் திரைக்கதைக்கு நிறையவே மினைக்கெட்டிருக்கின்றார்கள் என்பது பாடலைப் பார்க்கும் போதே புரிகின்றது. ‘ஹாட்ஸ் ஓப்’ கதிர் அன்ட் டீம்.

மதிசுதா அசால்டாக தனது பாத்திரத்தை இயல்பாக செய்து முடித்து விடுகிறார். புதுமுகம் கீர்த்தியின் சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்ஸ் கூட க்யூட். ஈழ சினிமாவுக்கு இன்னொரு நடிக்கக்கூடிய நடிகை கிடைத்திருக்கிறார் என்பது பாடலை பார்க்கும் போது புரிகின்றது. பத்மயனின் குரல் பாடலின் உயிர்.

ஒட்டுமொத்தத்தில் நிறைவான பாடலைத் தந்த ‘கார்குழலி’ பாடல் குழுவிற்கு பாராட்டுக்கள்.