முல்லைத்தீவின் காதல் – உமாகரன் இராசையாவின் “ஒப்பரேசன் வன்னி”

716

வெற்றி விநாயகன் வெளியீடாக நடனசிகாமணி ரூபன் (ஜேர்மனி) தயாரிப்பில் அண்மையில் வெளிவந்த பாடல் “ஒப்பரேசன் வன்னி”. புட்டுப்பாட்டு தந்த குழு என்பதால் இந்தப் பாடல் வெளிவரமுன்னே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

உமாகரன் இராசையா எழுதிய இந்தப் பாடலுக்கான இசையை திஷோன் விஜயமோகன் அமைத்திருந்தார். ரமணன் பாடியிருந்தார். பாடலை அழகாக இயக்கியிருந்தார் வாகீஸ்பரன் இராசையா.

ஏ.எஸ்.ராஜ் ஸ்ரூடியோ சார்பில் ஜீவராஜ் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை செய்திருந்தார். நடன இயக்கம் ஊரெழு பகி. பாடலில் ஊரெழு பகியுடன், ஆத்விக் உதயகுமார், ருத்விகா உதயகுமார், மிருஷா ராஜ்குமார், திருமலை பிரணவன் ஆகியோர் பாடலில் தோன்றி நடித்திருந்தார்கள்.

ஏற்கனவே “புட்டுபாடல்” என்ற மெகா வெற்றியைக் கொடுத்த கூட்டணி என்பதால், பாடல் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறினாலும் இந்தப் பாடலும் பலர் வாயில் முணுமுணுக்கும் பாடலாக தற்சமயம் மாறியுள்ளது.

ஊர்களின் பெயர்களை வைத்து பாடல் எழுதும் ட்ரெண்ட் கொஞ்சம் பழசானாலும் இந்தப் பாடலை தான் 2013 – 14 காலப்பகுதியில் எழுதியதாக பாடலாசிரியர் உமாகரன் குறிப்பிடுகின்றார். பாடலை காட்சிப்படுத்திய விதத்தில் அவர்களுடைய மினைக்கெடல்கள் நன்றாகவே தெரிகின்றன.

”புட்டு அவிக்க தெரிஞ்சா போதும் சீதனமே வேண்டாம்” என்று புட்டுப்பாட்டில் குறிப்பிட்டதை போல, “கட்டினால் முல்லைத்தீவு பெட்டையத் தான் கட்டுவன்” என்று இந்தப் பாடலிலும் ஒரு (Signature) குறிப்பிடத்தக்க வசனத்தை சேர்த்திருக்கிறார்கள். அது ட்ரெண்டாகியுள்ளது. வன்னியின் வாழ்வியலோடு, போரின் தாக்கத்தையும் பேசும் இந்த “ஒப்பரேசன் வன்னி” பாராட்டுக்குரியது.

தொடர்ந்தும் மண் வாசத்துடன் பாடல்களைத் தரும் இந்தக் குழுவினருக்கு ஒரு சபாஷ் போடலாம். வாழ்த்துக்கள்.