ஷங்ரம தீரனின் திக் திக் ‘தீரா நிசி’ குறும்படம்

1130

ஈழவாணியின் பூவரசி மீடியா தயாரிப்பில் ஷங்ரம தீரனின் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான குறும்படம் ‘தீரா நிசி’. பெண் குழந்தைகளை பாலியல் தேவைகளுக்காக கடத்துதல் என்பதான ஒரு பிரச்சனையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இவ்வாறான பிரச்சனைகள் மிகமிக அரிதான போதும்; இயக்குனர் வசிக்கும் இந்தியாவின் (இலங்கையரான இயக்குனரின் இக்குறும்படம் தமிழகத்தில் எடுக்கப்பட்டது) பல மாநிலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் இருப்பதை செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றோம்.

எனவே சமூக விழிப்புணர்வு குறும்படமாக இதனை வெளியிட்டுள்ளார்கள். சிறுமி, இரண்டு ஆண்கள் என மொத்தமே 3 பாத்திரங்கள் படத்தில் இருக்கின்றது. மூவரின் நடிப்பும் அசத்தல். இரவுக்காட்சிகளில் ஒளிப்பதிவாளர் முத்துக்குமரன் கலக்கியுள்ளார். படத்தொகுப்பில் சரண் சண்முகமும் தன் பங்கிற்கு சிறப்பாக பணியாற்றியிருக்கின்றார். பாலாஜியின் மிரட்டல் இசை படத்துக்கு பலம்.

பிச்சைக்காரனாக வரும் அந்த பொலிஸ் அதிகாரியின் ருவிஸ்ட்டைத் தவிர ஏனையவை எல்லாமே ஊகிக்ககூடியதாக இருக்கின்றமை திரைக்கதையின் பலவீனம். அதுவும் இந்தப் படத்திற்கு 20 நிமிடங்கள் என்பது சற்று நீளம் தான். ஷார்ப்பாக கொஞ்சம் கத்தரித்திருக்கலாம்.