க்ரீஷ் நலனியின் ‘ஏனடி’ பாடலை வெளியிடப்போகும் நம் நாட்டுப் பிரபலம்!

441

நம் நாட்டின் புகழ் பூத்த இசையமைப்பாளர் ஷமீலின் இசை மற்றும் வரிகளில் உருவான ‘ஏனடி’ பாடலின் ரீசர் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் முழுமையான பாடல் எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடப்படும் என அதன் இயக்குனர் க்ரீஷ் நலனி குவியம் இணையத்திடம் தெரிவித்தார்.

ஷமீல் – ஷாமிலாவின் குரல்களில் உருவாகியிருக்கும் இப்பாடலில் சியாம் ராஜ், க்ரீஷ் நலனி ஆகியோர் நடித்துள்ளனர். பாடல் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் படமாக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் பல பாகங்களை சேர்ந்து கலைஞர்கள் பங்கேற்றுள்ளார்கள் எங்கிறார் இயக்குனர்.

அது சரி, திடீரென இயக்குனராகும் எண்ணம் ஏன் வந்தது என அவரிடம் வினவியபோது, “இந்தப் பாடலை முதலில் நான் இயக்குவதாக இருக்கவில்லை. இதுபற்றி இசையமைப்பாளர் ஷமீலிடம் பேசிக்கொண்டிருந்த போது; இந்தப் பாடலை நீங்களே இயக்கலாமே! என அவர் என்னிடம் கூறினார். எனக்கு சற்று தயக்கம் இருந்த போது, ‘பாடல் வெளியாகி பாராட்டப்பட்டால் உனக்கு வெற்றி; சறுக்கினால் பாடம்’ என நம்பிக்கை தந்தார். அதன் பின்னரே பாடலை நானே இயக்குவது என முடிவானது” என்றார்.

இந்தப் பாடலை வெளியிடவுள்ளவர் நம் நாட்டின் சிறந்த நடிகர் ஜெராட் நோயல். நம்மவர்கள் பலரும் தங்கள் படைப்புக்களை தென்னிந்திய பிரபலங்களை கொண்டு வெளியிட்டு வருகின்ற சூழலில் எம்மவர் ஒருவரை வைத்தே பாடலை வெளியிடவுள்ள பாடல் குழுவின் முன்னெடுப்பு பாராட்டக்கூடியது.

விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சில பெண் இயக்குனர்களே எம்மத்தியில் காணப்படுகின்ற நிலையில் க்ரீஷ் நலனிக்கு இப்பாடல் சிறந்த ஆரம்பத்தை கொடுக்க வேண்டும் என வாழ்த்துகின்றோம்.

  • நடன அமைப்பு | கலை இயக்கம் – நிவின் டிலக்‌ஷன்
  • ஒளிப்பதிவு – சயேசன் க்ளிக்ஸ்
  • படத்தொகுப்பு – ஷாம் டில் ருக்‌ஷான்
  • இசை | வரிகள் | குரல் – ஷமீல்
  • இயக்கம் – க்ரீஷ் நலனி