விருதுகளுக்காக மட்டுமே படங்களை உருவாக்கினால் வணிக ரீதியாக தோற்போம் – இயக்குனர் சமிதன்

421

‘1023’, ‘நான் நீ அவர்கள்’, ‘The border’ உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கிய நம்பிக்கை தரும் ஈழ சினிமா படைப்பாளி சமிதன். 2010 இன் பின்னராக தொடர்ச்சியாக சினிமா முயற்சிகளில் ஈடுபட்டதுடன் மன்னாரை பிரதிநிதித்துவப்படுத்தும் குறுப்பிடத்தக்க சினிமா செயற்பாட்டாளர் அவர். தென்னிந்தியா சென்றும் சினிமா தொடர்பாக மேலதிக அனுபவங்களை பெற்றதுடன், உதவி இயக்குனராகவும் சில காலம் பணியாற்றியிருக்கின்றார். தற்சமயம் புலம்பெயர்ந்து ஐரோப்பிய தேசத்தில் வாழ்கின்றார். சினிமாவுக்கு சற்று இடைவெளி கொடுத்திருக்கின்றார். மீண்டும் ஒரு பெரு முயற்சியுடன் வருவார் என எதிர்பார்க்கலாம்.

சமிதன் 5 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து வெளியாகும் வார வெளியீடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விருதுகளை குறிவைத்து படங்களை தயாரித்தல் மற்றும் வர்த்தக சினிமாவை நோக்கியதான ஈழத்து சினிமாவின் அணுகுமுறை தொடர்பில் தனது கருத்தைப் பதிந்திருந்தார். வருடங்கள் சில கடந்த போதும் அந்தப் பதில்கள் இன்றும் பொருந்தும் என்பதால் பேட்டியாளரின் அனுமதியுடன் இதனை குவியம் வாசகர்களுக்காகப் பிரசுரிக்கின்றோம்.

கேள்வி : ஈழத்துச் சினிமாவினை வர்த்தக ரீதியில் வெற்றிகரமாக கொண்டு செல்லத் தேவையான மூலோபாய அணுகுமுறைகள் எவை எனக்கருதுகிறீர்கள்?

பதில் : ஈழத்து சினிமா வர்த்தக ரீதியாக வெற்றி பெறவேண்டும் என்றால் எமது படங்கள் கண்டிப்பாக வர்த்தக ரீதியாக இருக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவைத்தான் பார்த்து வருகிறோம். அது தான் பழக்கப்பட்டும் இருக்கின்றது. தென்னிந்திய சினிமாவில் வர்த்தக ரீதியான படங்கள் மிக பெரும்பான்மையாக வெற்றி பெறுகிறன. அதை வெற்றி ஆக்குவதில் ஈழத்து ரசிகர்களும் முக்கிய பங்காளியாகின்றார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு வர்த்தக ரீதியான படங்கள் கொடுக்கும்போது வெற்றிப்பெற வைப்பார்கள்.

கேள்வி : விருதுகளைக் குறிவைத்தே ஈழத்தில் பல குறும்படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலைமையை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் : அது தப்பு என என்னால் சொல்ல முடியாது. அது ஒவ்வொருவருடைய சிந்தனை. விருதுகளை மையப்படுத்தி எடுக்கும் போது அவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். ஆனால் வணிக ரீதியாக தோல்வியை சந்திக்கிறார்கள். வணிக ரீதியான வெற்றி, இந்தியா சினிமாவை நாங்கள் பிடிக்க வேண்டும் மற்றும் நாமும் வணிக ரீதியான வெற்றியை பெறவேண்டும் என்றால் நிச்சயமாக நாமும் வணிக ரீதியான படங்களை உருவாக்கி அதன் மூலம் விருதுகளை பெற முயற்சிக்க வேண்டும். விருதுகளுக்கு மட்டுமே படங்களை உருவாக்கினால் வணிக ரீதியாக தோற்போம்.