‘Family man 2’ எதிர்க்கப்பட வேண்டியது ஏன்? – ஈழத்தில் இருந்து கிருத்திகன்

485

சமூக வலைத்தளங்களின் அண்மைய பெரும் விவாதப்பொருளாக மாறி இருப்பது ‘Family man 2’ விவகாரம். ‘The Family Man’ வெப் சீரிஸின் வெற்றியைத் தொடர்ந்து Raj & DK தயாரிப்பில் வெளிவந்து Amazon prime தளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வெப் சீரிஸ் இந்த ‘Family man 2’. தமிழ் பேசும் சமூகத்தினரிடையே (இலங்கை/இந்தியா) இது மிகப்பெரும் விவாதப்பொருளாக மாறியிருப்பதற்கு காரணம் இதன் கதை.

ஈழ விடுதலைப் போராட்டத்தையும், அதன் போராளிகளையும், தலைவர்களையும் இழிவு படுத்தும் வகையிலும் போராட்டத்தை மழுங்கடிக்கும் வகையிலும் இந்தக் கதை இருப்பதாக பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இப்படியான கதையம்சங்களுடன் ஏதேனும் திரைப்படம் வந்திருந்தால் அது கடுமையான விளைவுகளைச் சந்தித்திருக்கும். ஆனால் இந்த வெப் சீரிஸ் OTT தளத்தில் அதுவும் அமெரிக்காவிற்கு சொந்தமான ஒரு தளத்தில் வெளிவந்திருப்பது எதிர்ப்பின் வேகத்தை குறைக்கின்றது. அதனால் சமூக வலைத்தளங்களில் அதிகம் இது பற்றி விமர்சிக்கின்றார்கள். அண்மையில் ட்ரெண்டிங்கில் உள்ள கிளப் ஹவுஸிலும் இது பிரதான விவாதப்பொருளாக மாறியுள்ளது.

உண்மையில் இது எதிர்க்கப்பட வேண்டியது தானா? அப்படி இதில் என்ன தான் இருக்கின்றது? என்கின்ற கேள்வி இதனை இன்னமும் பார்க்காத பலருக்கும் இருக்கின்றது. இந்த இடத்தில் சமூக வலைத்தள விமர்சகர் கிருத்திகன் மதிரூபனின் பேஸ்புக் பதிவு அதற்காக சரியான விளக்கத்தை கொடுத்திருப்பதாக படுகிறது. அதை அவரின் அனுமதியுடன் குவியத்தில் பிரசுரிக்கின்றோம்.

சில காலத்துக்கு முன்னர் பொபி சிம்ஹா நடிப்பில் “சீறும் புலி” என்ற ஒரு படத்துக்கான first look போஸ்டர் ரிலீசானது. அப்போது அது சம்பந்தமாகப் பல ஆதரவு / எதிர்ப்புப் பதிவுகளை பேஸ்புக் நெடுகக் கடக்க நேர்ந்தது. நான் அப்போதிருந்தே அந்தப் படத்தை எதிர்த்திருந்தேன். காரணம் வெகு சிம்பிள். எமது வரலாற்றைப் படமாக எடுப்பது என்பது இந்திய சினிமா இயக்குனர்களால் முடியாது. எம் வரலாற்றை எம்மவர்களாலேயே ஓரளவுக்கேனும் உண்மையோடு எடுக்கமுடியும்.

இந்திய இயக்குனர்களைப் பொறுத்தவரை தத்தமது சுயலாபங்களுக்காக மிகைப்படுத்தல்களையும், சுய அரசியலுக்காக உண்மைக்குப் புறம்பான விதமாகவும் வெளிப்படுத்தும் வாய்ப்புக்களே அதிகம். அளவுக்கதிகமான மிகைப்படுத்தல்கள் / Romanticized script என்பதை எம்மவர் போராட்டம் பற்றிய பார்வையைக் கேலிப்பொருள் ஆக்கும் என்பதையே அந்தப் பதிவில் தெளிவாகச் சொல்லியிருந்தேன். இதுவே சுய அரசியலுக்காக உண்மைக்குப் புறம்பான தகவலைப் பரப்பும் முயற்சி எவ்விதமாக இருக்கலாம் என்பதன் விளைவுகளே Family Man: Season 2 எனும் அபத்தம்.

Family Man: Season 2 கதை என்ன?

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தோல்வியைத் தழுவிய பிறகு போராட்டக்குழுவின் தலைவர் பாஸ்கரனும் (பிரபாகரன்), அவரது தம்பி சுப்புவும் , நம்பிக்கைக்குரிய நண்பர் தீபனும் (தமிழ்ச்செல்வன் + உருத்திரகுமார் கலவை) இலங்கையிலிருந்து தப்பித்துச் செல்கிறார்கள். புலம்பெயர் தேசமொன்றில் இருந்து நாடுகடந்த அரசை நிறுவும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த முயற்சி வெற்றி பெறக்கூடிய சாத்தியங்கள் தென்படும் போது, பாஸ்கரனின் தம்பியான சுப்பு இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்படுகிறான் (இலங்கை ஜனாதிபதி ரூபதுங்கவின் வேண்டுகோளுக்கிணங்க). சுப்புவை இரகசியமாக பாகிஸ்தான் உளவுப்படையாகக் காணப்படும் ISI அமைப்பு கொன்றுவிட, இந்தியா மீது பழி வருகிறது. தன் தம்பியைக் கொன்ற காரணத்துக்காக இந்தியப் பிரதமரைக் கொல்ல இந்தியாவில் மறைந்து வாழும் இயக்க உறுப்பினர்களைக் கொண்டு ஒரு மிஷனைத் தயார் செய்கிறார் பாஸ்கரன். அதை இந்திய உளவுப் பிரிவான TASC எப்படி முறியடித்தது என்பதே கதை.

இதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? எனக் கேட்பவர்களுக்கானது தான் இந்தப் பதிவு.

• இலங்கையில் வடக்கு கிழக்கு சூழலில் இருப்பவர்களுக்கு இயக்கத்தை Bottom to topஆகத் தெரிந்திருக்கும். அதாவது சாதாரண போராளிகளை முதலில் அறிந்து அவர்களுக்குப் பிற்பாடு தான் தலைமை பற்றிய ஒரு புரிதல் இருக்கும். இதுவே வடக்கு கிழக்கு சூழலில் வசிக்காதவர்கள், வெளிநாடுகளில் வசித்த, வசிக்கின்றவர்களுடைய பார்வை Top to bottomஆகவே இருக்கும். அதாவது இயக்கத்தின் தலைமை பற்றி ஒரு பார்வையும், அதன் பிறகே போராளிகள் பற்றிய புரிதலும் இருக்கும். ஆனால் Mass Audience யார் என்று பார்த்தால் இரண்டாவது வகையினரே. இப்போது இந்த இரண்டாவது வகையினரிடம் இயக்கத்தின் தலைமையைப் பற்றித் தவறான ஒரு புரிதலைப் புகுத்திவிட்டால் தானாகவே புலிகள் அமைப்பை ‘Brainwashed முட்டாள்களாக’ சித்தரித்து விடலாம். இதைத்தான் இந்த சீரிஸ் செய்திருக்கிறது.
உதாரணமாக, பிரபாகரனைக் குறிக்கும் பாஸ்கரன் கதாபாத்திரம், வெளிநாட்டில் கையில் மதுவுடன் இருந்துகொண்டு, இந்தியாவில் மீனவனாக இருக்கும் போராளியிடம் “போராளிகள் மது அருந்தக்கூடாது” என்று வலியுறுத்துவார். போராளிகள் ஏதோ கிடைத்ததை உண்ணும்போது, அவர் விதவிதமான சமையலும், பீஸாவும் உண்டபடி இருப்பார். இவ்வாறாக தான் மற்றவர்களை வவியுறுத்துவதற்கு முற்றுமுழுதாக முரணான வாழ்க்கையை வாழ்ந்தவாறு உசுப்பேற்றும் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

• இந்தியப் பிரதமரைக் கொல்வதற்காக ஒரு பெண் உள்ளிட்ட போராட்டக்குழுவைத் தயார்செய்தது எனும்போதே அனேகம் பேருக்கு ராஜிவ்காந்தி கொலை ஞாபகம் வந்திருக்கும். அதாவது இந்த சீரிஸில் அதே கதையை ரீமேக்காக alternate endingகோடு எடுத்திருக்கிறார்கள். ஆனால் என்ன, இங்கு அது இயக்கத்தலைவரின் தம்பியை யாரோ கொன்றதற்காக தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றதாகக் காண்பிக்கப்படுகிறது. அதிலும் கொன்றவனுடனேயே கூட்டுச் சேர்ந்ததாக வேறு காட்டியிருப்பார்கள்.இது எதையும் preach பண்ணவில்லை. ஆனால் இனி வரப்போகும் ஒரு தலைமுறை இந்த சீரிஸின் தாக்கத்தால் ‘பிரபாகரன் தனிப்பட்ட கோவத்துல தான்யா ராஜீவ்காந்தியைக் கொன்னார்’ என்று புரிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆக இங்கு இந்திய ராணுவம் செய்த ‘மகத்தான’ காரியங்கள் எல்லாம் சோற்றில் மறைந்த முழுப்பூசணிக்காய்களாகப் பல்லிளிக்கும் எதிர்காலம் தெரிகிறது.

• இந்த சீரிஸின் கடைசிக்கட்ட எபிசோட்களில் தீபன் (நாடுகடந்த அரசின் தலைவர்) பாஸ்கரனைக் கைது செய்வதாகக் காட்டப்படுகிறது. அதாவது ஆயுதப்போராட்டம் என்பதையே தேவையற்றது என்றும், சுயநலத்தால் வந்தது என்றும், முட்டாள்தனமானதாகவும் சித்தரித்து விட்டு, அரசியல் அணுகுமுறையே அவசியமானதாகவும் காட்டியிருக்கிறது.

• இதைப் பார்த்த சிலர் சமந்தாவின் ராஜி கதாபாத்திரத்தை எல்லாம் சிலாகித்திருந்தார்கள். ஒட்டுமொத்த சீரிஸையும் பார்த்தால் இந்த மாதிரியான சீன்ஸெல்லாம் வெகு குறைவு. மாறாக மேலே குறிப்பிட்ட அரசியலைப் புகுத்துவதற்காகவே இந்த சீரிஸ் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

• பெண் விடுதலைப் போராளி கதாபாத்திரத்திற்கு எதற்காக சமந்தாவைத் தெரிவு செய்திருக்கிறார்கள் என்று பலதடவை யோசித்தும் பிடிபடவில்லை. கரியைப் பூசிக்கொண்டு, பைல்ஸ் ஆப்பரேஷனில் அரைவாசியில் எழுந்துவந்ததைப் போல முஙபாவனையை வைத்திருந்தால் போராளி என்று அவரை யாரோ நம்பவைத்திருக்கிறார்கள். சமந்தாவை விட இயல்பான நடிப்பில் பிரியாமணியும், தேவதர்ஷினியும் இயல்பாக. ஸ்கோர் செய்கிறார்கள்.

• அடுத்து இந்த இந்திய நடிகர்கள் யாழ்ப்பாணத்தமிழ் பேசுவதற்கு முழுத்தடை விதிக்கவேண்டும். ஆளாளுக்கு கொலை செய்கிறார்கள். அதிலும் சமந்தா தான் மட்டத்திலும் மட்டம். இந்திய ஸ்லாங்கே ஒழுங்காக வராது. இதில் யாழ்ப்பாணத்தமிழ் சொல்லவே வேண்டாம்.

ஆக மொத்தத்தில் இது இங்கு இடம்பெற்ற போராட்ட வரலாறு பற்றி எவ்விதப் பிரக்ஞையும் இல்லாமல் ஒரு மட்டமான அரசியலைக் கொண்டுசேர்க்க எடுக்கப்பட்ட, எதிர்க்கப்படவேண்டிய, படு அவரேஜான ஒரு சீரிஸ். அவ்வளவு தான் சொல்லமுடியும்.

போராட்டம் பற்றியோ, பிரபாகரன் பற்றியோ, புலிகள் பற்றியோ ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இது போன்ற கேவலமான அரசியல் எதிர்க்கப்படவேண்டியது.