‘பொட்டு’ குறும்படம் பெண்கள் மீதான கலாசார ஒடுக்குமுறையைப் பேசுகின்றது – ரூபன் சிவராஜா

635

நவயுகா குகராஜாவின் இயக்கத்தில் மதுனி ஹிரன்யா அழகக்கோனின் ஒளிப்பதிவில் ஜோஸ்வா ஹெபியின் படத்தொகுப்பில் எம்.சி.ராஜ் இன் இசையில் உருவாகி அண்மையில் வெளிவந்துள்ள குறும்படம் “பொட்டு”. இந்தக்குறும்படம் பேச விளைகின்ற விடயம் பற்றி முன்னர் ஒரு செய்தியில் விரிவாகப் பார்த்திருந்தோம். இணைப்பு

படம் வெளிவந்த நாளில் இருந்து பொஸிட்டிவ்வான விமர்சனங்களை பரவலாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக பிரதான பாத்திரமேற்று நடித்த இயக்குனர் நவயுகா கணவனை இழந்த விதவைப் பெண் கதாபாத்திரத்தில் அச்சுஅசலாக நடித்து அசத்தியுள்ளார். அவரது குழந்தையாக வரும் அந்தச் சுட்டிப்பெண்ணும் தன் பங்கிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

“பொட்டு“ குறித்த பலரது விமர்சனங்களையும் படிக்கக்கிடைத்தது. அதில் நோர்வேயைச் சேர்ந்த ரூபன் சிவராஜா என்பவரது விமர்சனம் படம் சொல்ல வந்த செய்தியை கவனமாக வெளிப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. அதனை கீழே இணைத்துள்ளோம்.

பொதுவாகவே கலாச்சாரம் என்ற பேரில் பெண்கள் மீது பல்வேறு அடையாளச் சின்னங்களைத் திணித்து வைத்திருக்கின்றது சமூகம். அவற்றில் பெரும்பாலானவற்றிற்குப் பின்னால் ஆண் நலன், ஆணாதிக்கச் சிந்தனைகள் உள்ளன. திருமணமான பெண்ணுக்கான அடையாளமாகப் பொட்டு, தாலி என்பன அந்த வகையைச் சேர்ந்தவை.

கணவனை இழந்த பெண் பொட்டு அணியக்கூடாது என்பது அடிப்படையில் ஒரு கலாச்சார ஒடுக்குமுறை. தன்னை அழகுபடுத்திக் கொள்ள விரும்புகின்ற பெண்ணின் சுயத்தை ஒடுக்குகின்ற நடைமுறையின் பிரதிபலிப்பு. ஒருவர் தன்னை எப்படி அழகுபடுத்திக் கொள்வது, எப்படி உடுத்திக்கொள்வது என்பது தனிப்பட்ட தெரிவாக இருக்கவேண்டுமே தவிர, பிறரால் அல்லது சமூகத்தால் அது தீர்மானிக்கப்படக்கூடாது.

நல்ல காரியத்திற்குச் செல்லும் போது கணவனை இழந்த பெண்ணை விளித்துச் செல்லக்கூடாது. குடும்பத்தின், நண்பர்களின் கொண்டாட்ட நிகழ்வுகளில் அந்தப் பெண் கலந்து கொள்ளக்கூடாது போன்ற இன்னபிற பிற்போக்குத் தனங்களினதும் கலாச்சார ஒடுக்குமுறைகளினதும் எச்சங்களை இன்னும் எமது சமூகம் பெண்கள் மீது திணித்து வைத்திருக்கின்றது, சுமத்தி வைத்திருக்கின்றது. இதுதான் இந்தக் குறும்படத்தின் பேசுபொருள். “பொட்டு“ என்பது ஒரு குறியீடாக கையாளப்பட்டிருக்கின்றது.

தாயகத்தில் போரில் கணவனை இழந்த பெண்கள், கணவன்மார் காணாமலாக்கப்பட்ட நிலையில் ஒரு லட்சம் வரையிலான பெண்கள் தாயகத்தில் உள்ளனர் என்பது புள்ளிவிபரம். அவர்கள் வாழ்வாதார நெருக்கடிகளை மட்டுமல்லாது கலாச்சார ஒடுக்குமுறைகளையும், பாலியல் சுரண்டல்களையும் எதிர்கொள்கின்ற நிலையில் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே. இவற்றின் பின்னணியிலும் உரையாடல்களைத் திறந்துவிடக்கூடியது இந்தக் குறும்படம்.

இதனை எழுதி இயக்கி முதன்மைப்பாத்திரத்தில் நடித்திருப்பவர் நவயுகா குகராஜா. ஈழத் திரைப்படத்துறையில் தீவிரமாக இயங்கி வருபவர். குறும்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ள தேர்ந்த நடிகை. கவிஞரும் கூட. ஒற்றைப் பனைமரம், ஆறாம் நிலம் ஆகியவை அவர் நடித்து அண்மையில் வெளிவந்த முழுநீளத்திரைப் படங்கள். மிகுந்த தொழில்நுட்பத் தரத்தோடு இக்குறும்படம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.