மதிசுதாவின் புதிய படத்தின் தலைப்பு வெளியானது – ”வெந்து தணிந்தது காடு”

507

பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஈழத்தின் முன்னணி திரைத்துறைக் கலைஞர் மதிசுதாவின் புதிய படத்தின் தலைப்பு (Title) அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. எமக்கான தனித்துவ சினிமாவை எடுக்கும் நோக்குடன் கடந்த 10 வருடங்களாக ஈழத்து சினிமாவில் இயங்கும் இயக்குனர் மதிசுதா “ஊர் கூடி தேர் இழுப்பதைப்போல” எம் சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரின் பங்களிப்புடன் இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

“வெந்து தணிந்தது காடு” எனப்பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் பெயரே பல கதைகளை சொல்லிப்போவதாக பலரும் சமூக வலைத்தளங்களில் சிலாகித்து வருகின்றனர். போர் தின்ற எம் தேசத்தின் மூடப்பட்ட பங்கர்களுக்குள் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன. அவற்றில் சிலவற்றை மதிசுதா இந்தப் படம் மூலம் வெளிக்கொண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றன.

தற்கால கொரோனா முடக்க நிலை சீரடைந்ததும், விரைவில் இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் முதற்பார்வையை வெளியிட்டுள்ள இயக்குனர் மதிசுதா தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

எமது Dark days of heaven திரைப்படத்தின் தமிழ்த் தலைப்புக்காக காத்திருந்த அனைவருக்கும் நன்றிகளுடன் உங்கள் முன் பார்வைக்கு வைக்கின்றேன். Crowdfunding முறையில் பணம் சேர்த்து ஆரம்பிக்கப்பட்ட இத்திரைப்படம் 2 1/2 வருட பணச் சேகரிப்பில் 102 பேரின் பண முதலீட்டின் முடிவாக உருவானதாகும். முழுமையாக பணம் சேராவிடினும் மிகுதிக்கு என் சொந்தப் பணத்தை இட்டு முடித்திருக்கின்றேன்.

இந்தப் படம் என் படம் என்பதல்ல எங்கள் கதை என்பதே உண்மையானதாகும். இதன் வெற்றி தங்கியிருப்பது உங்கள் ஒவ்வொருவரிலும் தான். பகிர விரும்புபவர்கள் படத்தை தரவிறக்கிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதற்குத் தலைப்பிட முனைந்த அனைவருக்கும் நன்றிகளுடன். இப்படத்துக்காக உழைத்த கலைஞர்களுக்கும். என்னை நம்பி முதலிட்ட ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.