காதலின் பேசா மொழிகளும் வலிகளும் ஜெனோசனின் “இறகெனும் நினைவுகள்”

649

இளம் இயக்குனர், ஈழ சினிமாவில் நம்பிக்கை தரும் படைப்பாளி ஜெனோசன் ராஜேஸ்வரின் இயக்கத்தில் வட்ஸூவின் ஒளிப்பதிவில் கதிரின் படத்தொகுப்பில் தர்சன், கௌசி ராஜ் நடிப்பில் அண்மையில் வெளிவந்து பலரது பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு படைப்பு “இறகெனும் நினைவுகள்“.

இதனைப் பாடல் என்பதா? கவிதைக் கானம் என்பதா? என்று கூற முடியாதளவு ஒரு வித்தியாசமான உணர்வைத்தருகின்ற ஒரு மாறுபட்ட படைப்பு. நிச்சயமாக ஈழ சினிமாவில் இது புதிய முயற்சி. அந்த வகையில், இதன் இயக்குனரும், அவருடன் இணைந்து பணியாற்றிய குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள்.

இந்தப் படைப்பு கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளிக்கின்றது. அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இதன் வரிகள் அபாரம். (கீழே இணைக்கப்பட்டுள்ளது)

திரையில் தோன்றிய நடிகர் தர்சன், நடிகை கௌசி தமது பணியைச் செவ்வனே செய்திருக்கின்றார்கள். மனதை வருடும் இசையால் பத்மயன் கிறங்கடித்திருக்கின்றார். அதனைப் பற்றிப் பிடித்து உணர்வைக் கொண்டும் வரிகள் குரல் என எல்லாவற்றையும் கொண்டு படைப்பை வித்தியாசமாக நகர்த்தியிருக்கின்றார் இயக்குனர்.

வரிகள், குரல், ஒளிப்பதிவு என இந்தப் படைப்பிற்கு மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றிய வட்சனின் பணி தனித்து இந்தப் படைப்புக்கு பலம் சேர்த்திருக்கின்றது. நடிகை தரு கங்காதரன் குரல் வழியே இதில் இணைந்துள்ளார். கலை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனராக தொழிற்பட்ட கபில் ஷாமின் உழைப்பும் இதில் பெரியது என இயக்குனர் ஜெனோஷனே பாராட்டியுள்ளார்.

மிக முக்கியமாக இந்தப் பாடல் விகடன் யு-ரியூப் பக்கத்தில் வெளிவந்தமை எம்மவர்களுக்கு மிகப்பெரும் ஊக்கி. விகடன், பிகைன்ட்வூட்ஸ் என பல இந்தியத் தளங்களும் இப்பொழுது எம்மவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருப்பதுடன், அதனைச் சரியாக பற்றிப் பிடிக்க வேண்டியது எம் படைப்பாளிகளின் கடமையும் கூட…

Director Jenosan Rajeswar
Cast – T Dharshan || Kaushi Raj
AD & Art Director – Kapil Sham
Lyrics & Cinematography – Watsu Hathor
Vocal – Watsu | Tharu Kangatharan
Edit & Design -Kathir
Design – Rajeevan Thayaparan
Stills – Psn Pavin
Make Up – Agal By-shaki

என் மெல்லிசையே…
நீ உதிர்த்துச் சென்ற இறகெனும் நினைவுகள் மெல்ல மெல்ல
மெளனக் காற்றில் ஊசலாடி ஈர்க்கும் விதிக்கேற்ப விழுந்துகொண்டிருக்கின்றன…
அவை என்னோடு தீ தின்டு தீருமுன்…
ஆன்மாவின் முகம் காட்ட ஆசையில் உருகிறேன்..

உன் பிரியங்கள் நிராகரித்த பலதும் உயிர்ப்புடன் என் அருகிலிருந்தும்
அவையும் உனைப்போல பயனற்ற அமைதியின் நிழல்கள்….
சர்வ அண்டங்களும் தன்னுள் அடக்கிய ஓர் ஆத்மாவின்
பொறுமையை எஞ்சிய என் தவக்காலங்கள்…

உயிர் தங்கும் என் பிராணன் நீ
இட நெஞ்சின் தாளம் உன் பெயர்
காலமொரு மாய வலை
காட்சிகள் வெறும் கனவு
காதல் நினைவுகள் சாட்சி
உயிர் வரை நீயெனும் நீட்சி

ஆனால்! தெளிந்த வான் போலவே இருள் மேகங்களையும்
காதலிக்கக் கற்றுக்கொள் கண்மணி….
கண்ணெதிரே அவை மழையாகி விருட்ச விதைகளிற்கு உயிர்தரும்.
விருட்சங்களோ
நமக்கு உயிர் தரும் சுவாசமாய் மாறும்.
என் சுவாசக்காற்று நீ ஆதலால்….

நீ என் தலை கோதிய அதே மர நிழல்கள் இப்போது சருகுகளால் நிரம்பியிருக்கலாம்…
அன்று நம் இதழ்கள் பதிக்கையில் தாம் எம்மாத்திரம் என்று
குரலிழந்த தேன் சிட்டுகள் இப்போது வேறு தேசம் சென்றிருக்கலாம்….

கோடி ஆண்டுகள் கடந்தாலும் ஒரே பெளர்ணமியை ரசித்திக்கொண்டே இருக்கும் மனித குலம்….
அதன் கறைகள் பற்றி என்றும் குறை உரைக்கவில்லை
புலப்படாமல் அலையும் காற்று உள்ளிழுக்க உயிராதல் போல…
எங்கும் நீ நிறைந்து இறை காடினாய்..

“தூரத்தில் ஒளிரும் என் சின்ன நிலவிற்கு……
எங்கிருந்தோ உன் நினைவுகளில் மைத்துளிகளைச் சொட்டிக்கொண்டிருக்கும்
ஒரு ஆத்திரக் காரனின் மடல்…
உன்னால் உதிர்ந்த ஒவ்வொரு துளிகளும் ஆயிரம் உணர்வுகளுடன் காற்றில் கரைகிறது.

என் விரல்கள் பின்னிய கார்குழற் கயிறுகளில் மாய மனதும் ஏறமுடியாது சிக்கி மாய்கிறது…
காதல் வலையெனும் வார்த்தையின் அர்த்தங்களை இன்னமும் அது புரிந்துகொள்ளத் தவிக்கிறது…

தாய்க்குப் பின் தாரமென உரைத்ததெல்லாம் ஒளிய தாயன்பே தாரமென உனரவைத்த அந்தநொடி……
தாய்மை தொலைக்க மடி சாய்த்துத் தலைகோதி, உன் உதட்டின் ஈரம் படக் கன்னமெல்லாம் காதற்செடி.
உன்னைத் தொலைப்பதாய் என்னைத் தொலைக்கிறேன் என்னோடு சேர்த்து உன்னையும் தொலைக்கிறேன்.

இருண்ட பின் இரவுகளின் பனிகளோடு காமத்துளி….
கரைந்ததோ பனித்துளிகள் காலமெலாம் காதல் கடல்…
தழுவலில் உன் வாசம் என்சுவாசம் ஆனதடி..
சுவாசத்தைத் தொலைத்தெங்கு தொலைதூரம் நான் கடந்தேன்.

இருண்ட இரவுகளை மெளனக் குதிரையிலே இறுக அணைத்தபடி நாம் கடக்க…
காதோர சலசலப்பு ஓடைகளில் கேட்குதடி.
காலங்கள் கடந்தாலென்ன தோளோடு நீ இரடா…
இன்னமும் வற்றிப்போகா ஓடைகளை நம்பித்தான் வாழுமந்த மீனினம் போல்.
காட்சிகள் மாற மாற காரிகை தாகம்.
நீ போல் நீ தாண்டி வேறில்லை வா உயிரே….