சினிமா சமூக விடுதலைக்கானது; அந்த சந்தர்ப்பத்தை ஈழ சினிமா அடைந்திருப்பது மகிழ்ச்சி – இயக்குனர் லிங் சின்னா

425

‘சினிமா சமூக விடுதலைக்கானது. சினிமா ஒரு ஆயுதம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஈழத்து சினிமா அடைந்திருப்பது கட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது’ என இயக்குனர் லிங் சின்னா தெரிவித்துள்ளார்.

‘ஹீப்ரு லிலித்’ குறும்படம் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த லிங் சின்னா தற்சமயம் தனது புதிய குறும்படம் ஒன்றின் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஈழசினிமா / இலங்கைத் தமிழ் சினிமா முயற்சிகள் குறித்தும் தனது கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகின்றார்.

அந்த வகையில், இயக்குனர் மதிசுதாவின் புதிய திரைப்படமான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டைட்டில் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. அது குறித்தான தனது பதிவிலேயே லிங் சின்னா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பேஸ்புக் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘எழுத்தாளர் மு.சிவலிங்கம் எழுதிய சிறுகதை தொகுப்பொன்றின் தலைப்பில் ஒரு படம் வெளிவர தயார் நிலையில் இருக்கிறது. மலையக சிறுகதை தொகுப்பென்றாலும் கூட ஈழத்து கதையொன்று அங்கு மனசாட்சிக்கு விரோதமற்ற முறையில் பதிவு செய்திருப்பார் எழுத்தாளர்.

ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்ட நிதியின் கீழ் சுமார் 26 லட்சத்தில் இயக்குநர் மதிசுதா இயக்கியிருக்கும் முழு நீளத்திரைப்படம் ஒன்று உருவாகியிருக்கிறது. சுமார் இரண்டரை ஆண்டு உழைப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

இதுவரை பார்த்த ஈழப்படங்களில் எனக்கு இயக்குநர் கலிஸ் இயக்கிய காட்டாறும், இயக்குநர் ஞானதாஸ் காசிநாதர் இயக்கிய உரு மட்டுமே என் மரியாதைக்குறிய படமாக இருந்திருக்கிறது. வேறு சில இருக்கலாம்.

யுத்தம் விட்டுச்சென்ற கதை எக்கச்சக்கம். முன்னாள் போராளியின் மீது சுடுதண்ணீர் ஊற்றிய யாழ்ப்பாண முதலாளி, உயிர் காத்துக்கொள்ள பங்கருக்குள் ஒண்டிக்கொண்ட சிறுமியின் பாவாடைக்குள் கைவிட்ட பக்கத்து வீட்டு அங்கிள், புலிகளுக்கு பயந்து தன் தாலியை கழற்றி மகளுக்கு அணிவித்த அம்மாவின் சாட்சி, காணாமல் போன மகனின் பெயரில் பதில் கடிதம் எழுதிய இயக்கத்தினர்.

யுத்தத்தின் பின்னர் வீறுகொண்டெழுந்த சாதியம் மற்றும் வன்முறை, அதுவரை அமுங்கி இருந்தது எப்hடியென்ற ஆராய்ச்சி.. என்று போலி கௌரவத்தின் கீழ் வசதியாக வாழும் இருள் பக்கத்தை வெளிச்சத்திற்கு கொணர்ந்து தன் சமூகத்தின் உண்மை நிலையினை இலக்கியம் மூலமாகவும், கலையின் மூலமாகவும் வெளிக்கொணர்ந்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே இருக்கின்றார்கள்.

அதில் மிக முக்கியமானவர்கள் இயக்குநர் ஞானதாஸ் காசிநாதர், கலிஸ், கலைஞர், எழுத்தாளர் சோபா சக்தி, சிறுகதை எழுத்தாளர் வதனி, நாவலாசிரியர் தமிழ் மணி, வேறு சிலரும் இருக்கலாம்.

ஒரு சமூகத்தின் உண்மையான விடுதலையென்பது அச்சமூகத்தின் படப்பாளிகளால் இலக்கியவாதிகளால் மட்டுமே சாத்தியம். உடைத்து பேசும் போதே குற்றங்களின் எண்ணிக்கை குறையும். வேறு வழி இல்லையென்றே யதார்த்தம் புரியும் போதே இலக்கியமும் கலையும் வெடித்துக்கொண்டு வெளிவரும்.

சினிமா சமூக விடுதலைக்கானது. சினிமா ஒரு ஆயுதம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஈழத்து சினிமா அடைந்திருப்பது கட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டின் இறையான்மையின் படி சில விடயங்களை திரைப்படத்தில் வெளிப்படையாக பேச முடியாத சங்கடத்தில் இருந்தாலும் எதையெல்லாம் சொன்னால் சிக்கல் வராதோ அதையெல்லாம் மதி எடுத்துவைத்திருப்பார் என்று நம்பிக்கையிருக்கிறது.

இந்த முயற்சி ஈழத்து சினிமா பரப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்து வைக்கும். இப்படம் பெரும் வெற்றியடையும் பட்சத்தில் அடுத்தத்த படைப்பாளிகளுக்கு பெரும் நம்பிக்கை பிறக்கும். மதியின் முயற்சி வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகிறேன்.

ஈரானை போல உலகப்புகழ் அடையக்கூடிய அத்தினை கதையும் வளமும் ஈழத்தவர்களுக்கு இருக்கிறது. உடைத்து பேசுங்கள் உலகப்புகழ் பெறுங்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்’.