“மேதகு படத்தின் வியாபார வெற்றி ஈழத்து சினிமா படைப்பாளிகளுக்கும் ஒரு ஊக்கமாக இருக்கும்” – இரோஷன் புவிராஜ்

289

இயக்குனர் த.கிட்டுவின் கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள படம் ’மேதகு’. இது BS Value என்ற OTT தளத்தில் நேற்று (25) வெளியாகி உள்ளது.

தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை, உலகத்தமிழர்கள் நன்கொடை திரட்டல் வாயிலாகத் தயாரித்துள்ளனர். படத்துக்கு ரியாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன்குமார் இசை அமைத்துள்ளார்.

ஆரம்பத்தில், இந்த திரைப்படம் நவம்பர் 26, 2020 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டு 2021 இல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. தற்சமயம் தியேட்டர் ரிலீஸூக்கான ஏது நிலைகள் இல்லாமையாலும், OTT என்கிற தளம் இவ்வாறான படைப்புக்களுக்கு மிகச்சிறந்த வெளியீட்டு களம் என்பதாலும் காலத்திற்கேற்ப அதனை வெளியிட்டுள்ளார்கள்.

இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் சசிக்குமார், நடிகர் – இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகர் சத்தியராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து பாராட்டி தமது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். நம்மவர்கள் சிலரும் இதற்கான விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் முன்வைத்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கே தருகின்றோம்.

இரோஷன் புவிராஜ் : ‘Family man 2’ க்கு எதிர்ப்பு ஏன் அவசியம்?, அதனால் என்ன நன்மை நமக்கு? என்று பல கேள்விகள் எழுந்தது. மேலே சொன்ன உரையாடல்கள் எதிர்ப்பொலிகளின் விளைவாக ஈழத்தமிழர் பற்றியும், போராட்டம் பற்றியும் நம் கதைகளை பேச வேண்டிய அவசியம் பற்றியும், ஈழ சினிமாவின் மலர்ச்சி பற்றியுமான தெளிவு, விழிப்புணர்வு தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் மத்தியில் எழுந்தது. இவ்வளவு நாளாக வெளியீட்டுக்கு காத்திருந்த மேதகு திரைப்படத்தை இன்று 5 டொலர் கட்டி பார்க்கிறோமென்றால் அதற்கு முக்கிய காரணம் மேலே சொல்லப்பட்ட எதிர்ப்பலைகளின் உரையாடல்களே என்பேன்.

நீண்ட காத்திருப்புக்கு பின்னர் எம் கதை சொல்லி இளைய சந்ததிக்கு ஆவணமாக அமையக்கூடிய வகையில் ஒரு படைப்பு வெளிவந்திருக்கிறது. இது ஒரு பிரமாண்ட சினிமாவா? என்றால் இல்லை என்பேன். ஆனாலும் OTT தளத்தில் பார்வையிட அலுப்புத்தட்டாத ஒரு மிகச்சிறந்த உழைப்பு என்பேன். தனிச்சிங்களச்சட்டம் முதல் துரையப்பாவின் துரோகம் வரை தமக்கு விதிக்கப்பட்டிருந்த பட்ஜெட் நெருக்கடியிலும் நேர்த்தியாகவும் வரலாற்றை திரிபுபடுத்தாமலும் படமாக்கியிருக்கிறார்கள்.

தேசியத்தலைவர் பற்றிய கதை என்பதால் மாஸ் பி.ஜி.எம் போட்டு அவரை மாஸ் ஹீரோவாகவோ, கடவுளாகவோ காண்பிக்காமல் மிக இயல்பாக தலைவரின் உடல், பேச்சு மொழியுடன் அந்த பாத்திரத்தை வடிவமைத்தது சிறப்பு. முக்கியமான எங்கள் மொழி வழக்கு மிகச்சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது இப்படைப்பில்.

சின்ன சின்ன டீடெய்ல்கள் கலை இயக்குனர் மூலமும், ஆடை வடிவமைப்பாளர் மூலமும் காண்பித்து எங்களை சுத்தி கதை நடப்பது போல ஒரு உணர்வை உண்டாக்கியிருக்கிறது இப்படைப்பு. ஈழப்போராட்டம் பற்றி பொய் பிரச்சாரங்களும், இழிவுபடுத்தல்கள் நடந்தேறி வரும் இந்நாட்களில் மேதகு போன்ற படங்களுக்கான ஆதரவு கொடுக்க வேண்டியது அவசியமாகின்றது. மேதகு படத்தின் வியாபார வெற்றி ஈழத்து சினிமா படைப்பாளிகளுக்கும் ஒரு ஊக்கமாக இருக்குமென நம்புகிறேன். மிகச்சிறப்பாக இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கிட்டுவுக்கு சல்யூட். வாழ்த்துக்கள்.

கிருத்திகன் மதிரூபன் : எம்மவர் பிரச்சினைகளும், போராட்டமும் வேறுவிதமான சாயம் பூசுதலுக்கு உள்ளாகிவரும் சூழலில் சரியாக வெளியாகியிருக்கிறது ‘மேதகு’. ஒரு மணித்தியாலம் நாற்பது நிமிடங்களுக்குள் பண்டா-செல்வா ஒப்பந்தம், பௌத்த மேலாதிக்கத்தின் அழிச்சாட்டியங்கள், பிரபாகரன் பிறப்பு, சிறிமாவோ வருகை, 1958 கலவரங்கள் என ஆரம்பித்து நான்காவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அல்பிரட் துரையப்பா கொலை வரை அடிப்படைப் புரிதலுக்கு வேண்டிய விடயங்களை அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.

ராட்சஸன் பட இன்பராஜைத் தவிர அறிமுகமான முகங்கள் என்று யாரும் தென்படவில்லை. ஆனால் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எமது மொழியையும் ஓரளவுக்கு சரிவரப் பேச முயற்சி எடுத்திருக்கிறார்கள். எங்கும் உறுத்தலாகத் தென்படவில்லை. சிங்களத்தை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம். அதுமட்டுமே படத்தில் குறையாகத் தென்படுகிறது.

பாடல்களில் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ அட்டகாசமாக இருக்கிறது. பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. பிரம்மாண்ட படைப்பாக இல்லாவிட்டாலும் ஒரு அழகான தொடக்கப் புள்ளியாக அமைந்திருக்கிறது.

ஒரு இனத்தின் வரலாறும், அது கடந்து வந்த பாதையும் சரியாக ஆவணப்படுத்தப்படுவதே அதன் மீதான சேறுபூசுதலுக்கு எதிரான முதல்படி. அதற்கான முயற்சியை எடுத்த படக்குழுவுக்குப் பாராட்டுக்கள். முக்கியமாக இயக்குநர் கிட்டுவுக்கு நன்றிகளும், பாராட்டுகளும். இதனுடைய தொடர்ச்சிகளும் வரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

முக்கியமாக Family Man Season 2 மற்றும் ஜகமே தந்திரம் படங்களைப் பார்த்துவிட்டு ஈழத்தமிழர் அரசியல் பற்றி அலசவிழையும் அன்பர்கள் இதுபோன்ற படங்களைப் பார்த்து அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கலாம். இது எமது கதை

முடிந்தவரை BSValue App மூலமாகவே பார்த்து விடுங்கள். அதுவே இதுபோன்ற படைப்புக்களுக்கு நாம் செய்யும் குறைந்தபட்ச மரியாதை. இவற்றின் வணிக ரீதியான வெற்றிகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

மதிசுதா : விடுதலைப் புலிகளின் வரலாறு என்பதை 80 இல் தொடங்கி 90 இல் உள்ளடக்கி வைத்திருக்கும் புலி எதிர்ப்பு அலைக்குள், 90 இல் தொடங்கி 2009 வரை தன் கண் முன்னே நடந்த கொடுமைகளைக் கண்டு ஆயுதம் ஏந்தி மடிந்தவரையும் அந்தக் காழ்ப்புக்குள் தான் புலி எதிர்ப்பாளர் மறைத்து வைத்திருக்கின்றனர்.

80 களின் முன் நடந்த கதையை இங்கு காட்டி இருக்கின்றார்கள். இனவாதம், மதவாதம், மொழி வாதம் எப்படி எம்மை நசுக்கியது. இந்த தீவின் அமைதியை ஆட்சியாளர்கள் எவ்வாறு சீர் குலைத்தார்கள். அது தான் இன்று நாட்டை ஈடு வைக்கும் அளவுக்கு கொண்டு வந்து நிற்கிறது. மேதகு பாருங்கள் உங்கள் பல கேள்விகளின் தேடலுக்கு புள்ளிகள் இடப்பட்டுள்ளது.