ஆனந்த ரமணனின் ‘VICTIM’ வெப் தொடரின் முதல் இரண்டு பாகங்களும் வெளியீடு

1005

“ட்ரிங்கோ கிரியேஷன்” சார்பில் ஆனந்த ரமணனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள “விக்ரிம்” (Victim) வெப் தொடரின் முதலிரண்டு பாகங்களும் தற்சமயம் Trinco Creation யு-ரியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வெப் தொடர் குறித்து அதன் இயக்குனர் ஆனந்த ரமணன் தனது பேஸ்புக் பக்கத்தில் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் “சமாதானம்” எனும் சொல் “மீளிணக்கப்பாடு” எனும் சொல்லால் பிரதியிடப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. சமாதானத்தைப் போலவே மீளிணக்கப்பாடும் மிக மேலோட்டமாக மட்டுமே அணுகப்படுவதை தவிர்க்கவேண்டுமானால், தேசிய இன முரண்பாட்டின் மூலை முடுக்களையெல்லாம் அலசியெடுத்து ஒவ்வொன்றாகப் பதிவு செய்து பொது உரையாடலுக்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது.

“VICTIM”தொடர் எத்தனித்திருப்பது இதனைத்தான். ஒவ்வொரு கைதின் பின்னும், அதிகம் கவனம் பெறாத ஒவ்வொரு பெட்டிச் செய்தியின் பின்னும், விரியும் ஓராயிரம் கதைகளூடே நாம் பயணம் செய்யும்போது முறிந்தும் பிளந்தும் பகைத்தும் கிடக்கும் மனங்ளை ஒட்டவைக்கும் மந்திர முடிச்சுக்கள் ஒன்றிரண்டை அவிழ்க்கும் பயணத்துக்கு உங்களின் கைகளைப்பற்றி அழைத்துச் செல்லவிருக்கிறது “VICTIM”தொடர்.

உள்ளே கனன்றுகொண்டிருக்கும் எரிமலையின் அடிவாரத்தில் வீசும் குளிர்ந்த தென்றலாய் ஒரு காதல் கதையைக்கொண்டு, நம்நிலையையும் அழகியலையும் உள்வாங்கி இத்தொடர் பேச வைக்கப்போகும் பக்கங்கள் ஏராளம். இத் தொடர் தூண்டவிருக்கும் உரையாடல் மீளிணக்கப்பாட்டின் மெல்லிய நரம்புகளில் மீட்டப்படாத ஒரு சில சுரங்களை மீட்கப்போவது உறுதி.