இணையத்தில் வெளியாகியது ஆனந்த ரமணனின் “ஆறாம் நிலம்” திரைப்படம்

922

IBC தமிழின் “குறுந்திரை” சீசன் 2 இன் வெற்றியாளர் ஆனந்த ரமணனின் இயக்கத்தில் உருவான “ஆறாம் நிலம்” முழு நீளத்திரைப்படம் அண்மையில் ஐ.பி.சி. தமிழ் யு-ரியூப் பக்கத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதுவரை 70,000 மேற்பட்ட பார்வையை அது கடந்துள்ளது.

“ஆறாம் நிலம்” குறும்படத்தை எழுதி, இயக்கியுள்ளார் திருகோணமலையைச் சேர்ந்த ஆனந்த ரமணன். இதன் ஒளிப்பதிவு சிவ சாந்தகுமார். படத்தொகுப்பு சஜீத் ஜெயக்குமார். இசை சிந்தக ஜெயக்கொடி. பிரதான பாத்திரத்தில் நவயுகா (இலங்கை) மற்றும் மன்மதன் பாஸ்கி (பிரான்ஸ்) ஆகியோர் நடித்துள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தியாவில் ஒரு சில சிறப்புக் காட்சிகள் மட்டுமே இதுவரை காண்பிக்கப்பட்ட நிலையில், இப்படம் தற்சமயம் இணையத்தில் வெளியாகி உள்ளது. நாடளாவிய ரீதியில் இதனைக் காட்சிப் படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கொரோனா சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்க வில்லை.

போர் தின்ற மண்ணில் இன்றும் தொடரும் பல அவலங்களில் சிலவற்றை இப்படத்தின் ஊடாக வெளிக்கொண்டு வந்திருக்கின்றார் இயக்குனர். எம் மண்ணின் கதைகளை படமாக்குவதில் எழும் சிக்கல் நிலை என்னவென்பது உங்களுக்கு தெரியாததல்ல.. நல்லாட்சி காலத்தில் கிடைத்த சிறிய சுதந்திரத்தை வைத்து இப்படத்தை எடுத்திருக்கின்றார் ஆனந்த ரமணன். இவ்வாறான ஒரு படத்தினை தயாரிக்க உறுதுணையாக இருந்த ஐ.பி.சி. நிறுவனத்திற்கும் பாராட்டுக்கள். படத்தை இதுவரை பார்க்காதவர்கள் பாருங்கள். விரிவான விமர்சனத்துடன் விரைவில் சந்திக்கின்றோம்.