‘ஆறாம் நிலம்’ முடிவுறாத துயரங்களின் திரைமொழி – விமர்சனம்

796

இயக்குனர் – ஆனந்த ரமணன்

ஒளிப்பதிவு – சிவ சாந்தகுமார்

படத்தொகுப்பு – சஜீத் ஜெயக்குமார்

இசை – சிந்தக ஜெயக்கொடி

தயாரிப்பு – ஐ.பி.சி. தமிழ்

முற்றத்தில் கட்டமிடப்பட்ட கோடுகளின் மீதேறி நொண்டி விளையாடும் ஒரு சிறுமி, மலைமகள் எனும் பிரதான கதாபாத்திரத்தின் மகள் அவள். பாரம்பரியமாக நொண்டிக்கோடு விளையாட்டில் பயன்படுத்தப்படும் சிப்பி என்ற துண்டுக் கல்லை எறிவது தொடர்பில் கேள்வி எழுப்புகிறாள். ‘மேலாலயோ? கீழாலயோ?’ என்கின்ற அந்தக் கேள்விக்கு எதிர்த்தரப்பு (பெரும்பாலும் சகோதரர்கள் அல்லது அண்டை வீட்டு சிறுவர்கள்) பதில் சொல்ல வேண்டும்.

இங்கு தானே தனக்கு சாதகமான அல்லது சவாலான ஓர் பதிலை சொல்லி அந்த விளையாட்டு தொடர்கிறது. ஏறக்குறைய அதே நாள் இரவு ‘இப்போ நான்’.. ‘இப்போ நான்’.. எனக் கூறியவாறு ‘டாம்’ விளையாடுகிறாள் தமிழினி.

நிற்கதிகளான உறவுகளைப் பேசுபொருளாக கொண்டது ‘ஆறாம் நிலம்’. இந்த காட்சி வலி மிகும் உதாரணம்.

உடைத்தழிக்கப்பட்ட வீடு, பாவனைக்கு உதவாத – குப்பைகளால் நிரப்பப்பட்ட கிணறு, ஒற்றை பசு மாடு, அடைகாக்க இடம் கொடுக்கப்படும் கோழி.. என வாழ்வியல் அம்சங்களுக்கான காட்சிகளுடன் பயணிக்கும் ‘ஆறாம் நிலம்’ பேசும் மையப்பொருள் மிக முக்கியமானது.

யுத்தம் மௌனிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும், இந்தப் படைப்பு ஏற்படுத்தும் தாக்கம், இந்த திரைமொழி உள்ளுக்குள் ஏற்படுத்தும் நிசப்தம் என்பது தான் இத்திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கப்பட வேண்டியவை.

பொதுவாக திரைப்படங்களில் வைக்கப்படும் பதாகைகள், சுவரொட்டிகள் என்பன அத்திரைப்படத்துக்கான காலப்பகுதியை குறிக்க அல்லது எந்த பின்னணியில் அத்திரைப்படம் உருவாகியுள்ளது என்பதை குறிக்க பயன்படும். இங்கு, தமிழினி பாடசாலைக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகை இப்படத்தின் மையப்பொருளுடன் உணர்வுபூர்வமாக ஒன்றியுள்ளமை, அந்த பதாகையும் ஓர் பாத்திரமாக்கப்பட்டுள்ள உணர்வைத் தோற்றுவிக்கிறது.

இந்த மண் எத்தனை தூரம் ஆற்றாமைகளுக்கும் வலிகளுக்கும் முகம்கொடுத்துள்ளதோ அதனைவிட அதிகமாக தன்னம்பிக்கைக்கும் துணிவுக்கும் பெயர்போனது.

அண்மையில் வடக்கின் சில மாவட்டங்களில் அங்கவீனமான முன்னாள் போராளிகள் சிலர் இரந்து வாழ்வதாகவும் அவர்களில் சிலர் ஏற்கனவே செய்யப்பட்ட உதவிகளை தவறாக பயன்படுத்தியதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சனம், ஆதரவு / எதிர் கருத்துகள் பகிரப்பட்டபோது, அது தொடர்பாக சில நாட்களுக்கு பின்னர் சந்திக்க கிடைத்த ஓர் முன்னாள் போராளி கருத்து தெரிவித்தார்.

‘அங்க இருந்து வந்து வாழ்க்கையோட போராட தெரியாதவர்களுக்கு வேறெந்த முறையிலும் பழக்க முடியாது. துணிவையும் தன்னம்பிக்கையையும் கற்றுத்தந்த மிகப்பெரும் பாடசாலை அது’ என்று. இதை சொன்ன முன்னாள் போராளி இரண்டு கண் பார்வையினையும் இழந்து, பலசரக்கு கடை நடத்தி வாழும் ஓர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர். அவ்வாறான ஓர் தன்னம்பிக்கையின் சாட்சியாக மற்றுமொரு பலசரக்கு கடை வியாபாரி / ஆட்டோ ஓட்டுநர், யதார்த்தத்தின் வெளிப்பாடாக கவிதா என்கின்ற பாத்திரங்களும் படைக்கப்பட்டுள்ளமை நிறைவு.

ஒரு விதானையராக, ஒரு புலனாய்வாளராக, சாமானியர்களின் பணத்தையும் உடலையும் உறிஞ்சக் காத்திருக்கும் இதே சமூகத்துக்குள் தான் ஒரு சங்கரனும் கால்களை இழந்த ஒருவனும் ஏனையவர்களுக்கு உதவக் காத்திருக்கிறார்கள்.

ஆறாம் நிலத்தின் எல்லா நொடிகளும் விவரித்துவிட முடியாத ஓர் மௌன வலியுடன் கடந்து செல்கின்றன. அந்த மௌன வலியினை மீண்டும் மீண்டும் உணரச் செய்வதில் இத்திரைப்படத்தின் இசை உருவாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

அரசியலில் சொல்லப்படாத வார்த்தைகளுக்கே வலிமை அதிகம் என்பது போல, இங்கு, கடைசி வரையிலும் எல்லாவற்றையும் தனக்குள் புதைத்துக்கொண்டு பயணிக்கும் மலைமகளின் வெளிப்படுத்தப்படாத துயரங்களுக்கே வலி அதிகமாக காணப்படுகிறது.

ஒட்டு மொத்தமாக மலைமகளின் ஈரம் காயாத கண்ணீரும் தமிழினியின் விடைகாணாத ஏக்கமும் இந்த தீவின் ஏதோ ஓர் பகுதியில், இன்னும் இன்னும் ஏங்கிக்கொண்டிருக்கும் அன்னையர்களதும் தந்தையர்களதும் பிள்ளைகளினதும் பிரதிபலிப்புகளே.