எல்லா செயலுக்கும் ஒரு “பெறுமதி” இருக்கு – குறும்பட விமர்சனம்

922

புங்குடுதீவு நேசன் குமாரின் தயாரிப்பில், “படைப்பாளிகள் உலகம்” ஐங்கரன் கதிர்காமநாதன் வழங்கும் “பெறுமதி” குறும்படம் நேற்று (10) வெளியாகியுள்ளது.

சங்கீதா நடேசலிங்கம் இயக்கியுள்ள இக்குறும்படத்தில் மிதுனா, ரகு, மாணிக்கம் ஜெகன், பிரியா, சசிகரன் யோ, ஷாஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராஜா ஒளிப்பதிவு செய்திருக்கின்றார். படத்தொகுப்பு சசிகரன் யோ. இசை ஜெயந்தன் விக்கி.

உழைக்கும் பெண்களுக்கு சில புகுந்த வீட்டில் கிடைக்கும் “பெறுமதி“ பற்றி இக்குறும்படம் பேசுகின்றது.

குடும்பப் பெண்கள் வேலைக்குச் செல்லும் போது அவர்களை மதிக்கும் சுற்றத்தார் வேலை இல்லாமல் இருக்கும் போது பெறுமதி அற்றவர்களாக பார்ப்பதாக திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. நிறைவில், எல்லா செயலுக்கும் ஒரு பெறுமதி இருக்கின்றது என்பதாக படம் முடிவடைகின்றது.

இந்தக் குறும்படத்தின் எழுத்துப்பணிகளை ஸ்ரீ துசிகரன் கவனித்துள்ளார். பிரதான பாத்திரமேற்று நடித்த மிதுனாவின் நடிப்பு நன்றாகவே இருக்கின்றது. சுவிஸ் ரகுவும் தன் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கின்றார்.

ஆர்ப்பாட்டம் இல்லாத திரைக்கதை சொல்ல வந்த சேதியை அழுத்தமாக கூறிப்போகின்றது. பெண் இயக்குனர் என்பதால், அவர்களின் பார்வையில் இந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கதைகளை சொல்லாம் என்பது ப்ளஸ். ஆனாலும், சங்கீதாவின் முன்னைய குறும்படமான “கருவலி“யில் இருந்த ஜதார்த்தாம் இதில் இல்லையோ என்று எண்ணத் தோண்றுகின்றது.

காட்சிப்படுத்தல்களில் இயல்பைத் தொலைத்ததாக உணர வைக்கின்றது. குறிப்பாக இந்திய சீரியல்களில் காட்டுவது போல, வீட்டில் இருக்கும் போதும், உறங்கச் செல்லும் போதும் புத்தாடைகள் அணிவது, சற்று நெருடலைக் கொடுக்கின்றது. வசனங்களும், பாதி இயல்பாகவும், பாதி சினிமா தனத்திலும் இருக்கின்றது.

சிற்சில குறைகளைத் தவிர, ஒட்டு மொத்தத்தில் இந்தப் “பெறுமதி” குறும்படம் பெறுமதியானது.