இனங்களைக் கடந்தது “மனிதம்” என்பதைக் கூறியிருக்கும் HUMANE குறும்படம்

370

சுதந்திரத்திற்கு பின்னர் ஆசியாவின் ஆச்சரியமாக மாறியிருக்க வேண்டிய இலங்கை, 70 வருடங்கள் கடந்தும் இனவாத தீயால் வெந்து நொந்து கொண்டிருக்கின்றது. மனிதர்களிடையே மனிதம் தொலைந்து போயிருக்கின்றது. இதனால், இன்றும் மற்றைய நாடுகளிடம் கடன் கேட்டு கையேந்த வேண்டியிருக்கின்றது. இந்தப் பின்னடைவுகள் எல்லாவற்றுக்கும் அடிப்படை “இனவாதம்”.

இனங்களைக் கடந்தது மனிதம் என்பதை உறைக்கும் வகையில் எடுத்துக் கூறியிருக்கின்றது நௌபரின் ஹியூமனே (HUMANE) குறும்படம். இதில், பெரும்பான்மை இனத்தவராக காட்டப்படும் நாயகி, சிறுபான்மையினத்தவரின் உணவகத்தைப் புறக்கணிக்கின்றார். மறுபுறத்தே, இவர் எந்த சிறுபான்மை இனத்தவரைப் புறக்கணித்தாரோ, அந்த இனத்தவர் நாயகியின் மகளை காப்பாற்றுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கின்றது.

இறுதியில் இனங்களைக் கடந்தது மனிதம் என்பதை உணர்த்திச் சென்றிருக்கின்றது இக்குறும்படம்.

ட்ரிங்கோ கிரியேசன்ஸ் வெளியீடாக வடமலை ராஜ்குமார் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இப்படத்தை நௌபர் இயக்கியுள்ளார். கதை ஆனந்த ரமணன், ஒளிப்பதிவு ரிஷி செல்வம், படத்தொகுப்பு திலீப் லோகநாதன், இசை ஷமீல்.

மிதுனா, சஞ்ஜெய், உமர் லெப்பை முகமெட் சஜீத், செல்வம் ஜெகதீஸ், முருகையா தனுஷிகா ஆகியோர் இக்குறும்படத்தில் நடித்துள்ளனர்.