சர்வதேச விருதுகள் பெற்ற விமல்ராஜின் குறுந்திரைப்படங்கள் வெளியீடு

352

இயக்குனர் விமல் ராஜின் இயக்கத்தில் உருவாக்கி  சர்வதேச விருதுகள் பெற்ற ‘எழில்’ மற்றும் ‘சுகந்தி’ ஆகிய இரு குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. 

யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) மாலை 03 மணி மற்றும் மாலை 04 மணி காட்சிகளாக இரு காட்சிகள் திரையிடப்படவுள்ளன.

குறித்த காட்சிகளுக்கான டிக்கெட்டுக்களை 0764673945 மற்றும் 0760220001 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குனர் விமல்ராஜ் குறித்து மூத்த திரைத்துறைக் கலைஞர் காசிநாதர் ஞானதாஸ் தனது முகநூல் பக்கத்தில் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார்.

எமக்கான சினிமா முயற்சியில் மிகவும் காத்திரமான முறையில் சிந்தித்தும் செயற்பட்டும் கொண்டிருப்பவர் Filmmaker Vimalrajh. காத்திரமாக மட்டுமல்ல, தொடர்ச்சியாகவும் ஓயாமலும் சலிக்காமலும் சோரம் போகாமலும் சோர்ந்து போகாமலும் ‘மிதப்பேதும் கொள்ளாமலும் இயங்கிக் கொண்டிருப்பவர் விமல்ராஜ்.

அவரது படைப்புகள் அனைத்தும் ஏதாவது சமூப்பிரச்சினையை – பேச வேண்டியதும் பேசப்படாததுமான விடயத்தை பேசி வருகின்றன. மண்வாசனைக்கும், வட்டாரப் பேச்சுக்கும், எம் அன்றாட வாழ்வியல் அம்சங்களுக்கும், பண்பாட்டுக் கூறுகளுக்கும் அவரது படைப்பில் பஞசமிருப்பதில்லை.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குறுந்திரைப்படங்களை எழுதி இயக்கி வெளியீடு செய்யும் அவருடைய வல்லமையும் ஆற்றலும் ஆளணியும் வியக்கத்தக்கது.

வரும் ஞாயிறன்று விமல்ராஜ் எழுதி இயக்கி பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் வென்ற இரண்டு குறுந்திரைப்படங்கள் யாழ்ப்பாணம் ‘ராஜா திரையரங்கில்’ திரையிடப்படுகின்றன.

விமல்ராஜ்ஜுக்கும் அவரது சேர்ந்து உழைத்த நடிகர்கள் மற்றும் அனைத்துப் படைப்பாளிகள் கலைஞர்கள் உதவியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.