JICF 2022 – யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா – இறுதி நாள் நிகழ்வும் விருது வழங்கலும்

376

7 ஆவது முறையாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா இம்முறை கட்டம் கட்டமாக நடைபெற்று இறுதி நிகழ்வுகள் கடந்த 9 ஆம் திகதி முதல் நேற்று (14) வரை இடம்பெற்றன.

இறுதி நாளில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன், இரவு விருது வழங்கும் விழாவும், நிறைவுக் காட்சியாக இலங்கையின் புகழ்பெற்ற இயக்குனர் பிரசன்ன விதானகேயின் “காடி” திரைப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, யாழ் பல்கலைக்கழக கலைப்பீட, நுண்கலைப்பீட பீடாதிபதிகள், திரைப்பட செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, சவேசன் நல்லையா இயக்கிய The Bachelor Party குறும்படம் பார்வையாளர்களின் சிறப்பு விருதைப் பெற்றது. சிறந்த அறிமுகத்திரைப்படத்தை இந்தியத் திரைப்படம் தட்டிச்சென்றது.

வாழ்நாள் சாதனையாளர் விருது இருவருக்கு வழங்கப்பட்டது. அதில், ஒருவர் “பைலட் பிரேம்நாத்” உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைச் சேர்ந்த ஜோ தேவ் ஆனந்தன். மற்றையவர் படத்தொகுப்பாளர் – சினிமா எழுத்தாளர் ஆதர் யு அமரசேன.

நன்றியுரையை விழா இயக்குனர் அனோமா பொன்சேகா வழங்கியிருந்தார். நிறைவாக பிரசன்ன விதானகேயின் “காடி” திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுவது இதுவே முதன் முறையாகும். எனவே, பெருமளவு சினிமா விரும்பிகள் அதனைக் காண வந்திருந்தனர்.