மிரட்டும் “யோகினி” முதற்பார்வை – படம் எதைப்பற்றியது? இயக்குனர் க்ரிஷ் நலனி செவ்வி

553

‘றிஸ்வான் என்டர்டெயின்மன்ட்“ தயாரிப்பில் க்ரிஷ் நலனி இயக்கத்தில் உருவாகிவரும் குறும்படம் “யோகினி“. இதன் முதற்பார்வை, மகளிர் தினமன்று தர்மதுரை மற்றும் தர்பார் புகழ் திருநங்கை ஜீவா சுப்ரமணியன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டது.

பல்வேறு மாவட்ட கலைஞர்களின் ஒருங்கிணைப்பில் கொழும்பு நகரில் இக்குறும்படத்தின் படப்பிடிப்புக்கள் இடம்பெற்றன.

இப்படத்தில் பூர்விகா ராசசிங்கம், ஷ்யாம்ராஜ், பிராசாந்தனி, ரொபின்சா, டினேஸ் டி.கே, பேபி ஓவியா, பேபி லகித்தி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு ஜனா RJ, படத்தொகுப்பு ஸம்பத் ரூபன், இசை ஷமீல் J, ஒப்பனை சிந்து, போஸ்டர் வடிவமைப்பு TN சதீஸ், உதவி இயக்குனர் AK சந்துரு, தயாரிப்பு நிர்வாகம் பிரகாஸ்.

யோகினி குறும்படத்தின் முதற்பார்வையே மிரட்டலாக இருந்தது. சிகரெட், மதுக்கிண்ணம், மாத்திரைகள், இரத்தம் தோய்ந்த கத்தி… இவற்றுக்கிடையில் நாயகி பூர்விகா மிரட்டலாக அமர்ந்திருக்கும் அந்தப்போஸ்டரும், அதன் எழுத்துக்களும் படம் பற்றிய பல சிந்தனைகளைத் தூண்டியிருந்தன. இது பற்றி இயக்குனர் க்ரிஷ் நலனியுடன் பேசினோம்.

கேள்வி – ஃபொஸ்ட்லுக் போஸ்டரே மிரட்டலாக இருக்கின்றதே! படம் எதைப்பற்றிப் பேசப்போகின்றது?

பதில் – (சிரித்தபடி) பெண்களைப் பற்றித்தான்.. பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றித் தான் பேசப்போகின்றது. “Bad touch” என்கிற விடயத்தை ஏதோவொரு சந்தர்ப்பத்தில் கடந்து வராத பெண்களே இருக்க முடியாது. படிக்கும் இடம், தொழில் இடம், பொது இடம் என ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பெண்கள் இதனை அனுபவித்திருப்பார்கள். இப்படி, பாதிக்கப்பட்ட ஒரு பெண், அந்த அழுத்தங்களில் இருந்து எப்படி மீண்டு வருகின்றாள்? என்பது தான் கதையாக இருக்கும். பாதிக்கப்பட்ட பெண் என்பதால், பல விடயங்களை காட்சிப்படுத்தியிருப்போம். எனவே, காட்சிகளை விமர்சனம் செய்யாது, அதிலிருந்து பாடங்களை மட்டுமே கற்க வேண்டும்.

கேள்வி – இந்தப்படத்தை திருநங்கை ஜீவா சுப்ரமணியம் வெளியிட்டதைப் பற்றி…

பதில் – இது குறித்து பலர் என்னிடம் கேட்டிருந்தார்கள். திருநங்கை ஒருவர் வெளியிட்டால் நாம் ஆசீர்வதிக்கப்படுவதாக உணர்ந்தேன். எனவே, திருநங்கை மூலமாகவே வெளியிட வேண்டும் என நினைத்தேன். ஜெனா ரவியின் உதவியுடன் திருநங்கை ஜீவாவை தொடர்புகொண்டு இதனை வெளியிட்டோம். அதனை மகளிர் தினத்திலும் வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

கேள்வி – படம் எந்தளவு முடிந்திருக்கின்றது? எப்போது வெளியீடு?

பதில் – படிப்பிடிப்புக்கள் பெரும்பாலும் முடிந்து விட்டன. ஒரேயொரு காட்சி மட்டுமே எஞ்சியிருக்கின்றது. படத்தொகுப்பு பணிகளும் சமகாலத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தில் ஒரு பாடல் இருக்கின்றது. மே மாதம் இதனை வெளியிடும் முனைப்பில் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றோம்.

கேள்வி – நடித்துக்கொண்டிருந்த நீங்கள் திடீரென படம் இயக்கக் காரணம் என்ன?

பதில் – இந்தக் கதையை நான் எழுதினேன். இதில் பல உண்மையான விடயங்கள் இருக்கின்றன. எழுதும் போதே பூர்விகாவை இதில் நடிக்க வைப்பதாக நினைத்தே எழுதினேன். கதையை நண்பர்களிடம் கூறிய போது, என்னையே படத்தை இயக்குமாறு கூறினார்கள். பெண் இயக்குனர்கள் குறைவு என்பதால் என்னை உற்சாகமூட்டினார்கள். ஏற்கனவே “ஏனடி“ என்கிற பாடலை இயக்கியுள்ளதால், இதனை ஒரு சவாலாக எடுத்துச் செய்தேன்.

கேள்வி – குறும்பட இயக்குனராக உங்கள் அனுபவம் எப்படி இருக்கின்றது?

பதில் – பாட்டு செய்யுறது ஈஸி. இது ரொம்ப கஷ்டம். அதுவும் இந்தக் குறும்படத்தில 3 கதைகள் இருக்கு. எனவே, நிறைய மினைக்கெட வேண்டியதாக போய்விட்டது. இயக்குனராக காட்சியமைப்பிலும் வசனங்களை பேசுவதிலும் நிறையவே கவனமெடுக்க வேண்டும். இந்த ரிஸ்க் எல்லாம் பாடல்கள் செய்யும் போது இல்லை. படப்பிடிப்புக்கு பின்னரான போஸ்ட்புரொடக்ஸன் பணிகளும் இருக்கின்றன. எனவே, நண்பர்களின் உதவியுடன் அதை செய்து முடிக்கக் கூடியதாக இருந்தது.

கேள்வி – தொடர்ந்தும் இயக்குனராக படங்கள் செய்யும் எண்ணம் இருக்கின்றதா?

பதில் – கண்டிப்பாக.. அடுத்த கதை ரெடி. கதை என்னோடது.. அதுக்கு ஸ்கிறிப்ட் வேர்க் மட்டக்களப்பில ஒரு பொண்ணு செய்றா. அவ தான் உதவி இயக்குனரா வேலை செய்யப்போறா.. விரைவில் இரண்டாவது குறும்பட படப்பிடிப்புக்கு கிளம்புறோம்.

வாழ்த்துக்கள் க்ரிஷ் நலனி. உங்கள் திரைப்பயணம் தொடரட்டும்.