பெண் இயக்குனர்களின் ப்ளஸ், மைனஸ்!; கலைஞர்கள் ஒன்றுபட்டால் பெரியளவில் சாதிக்கலாம் : நடிகை பூர்விகா செவ்வி

641

பாடல்கள், குறும்படங்கள், முழு நீளத்திரைப்படம் என பிஸியாக நடித்து வரும் நடிகை பூர்விகா, “பெட்டைக்கோழி கூவி” (குறும்படம் – இயக்கம் நவயுகா), “லூசி” (திரைப்படம் – இயக்கம் ஈழவாணி), “யோகினி” (குறும்படம் – இயக்கம் க்ரிஷ் நலனி) என அடுத்தடுத்து பெண் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இலங்கைத் தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் பங்கு மிகக்குறைவாக இருக்கும் நிலையில், இவ்வாறு பெண் இயக்குனர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை நடிகை பூர்விகா குவியம் இணையத்துடன் பகிர்ந்து கொண்டார்.

கேள்வி – பெண் இயக்குனர்களுடன் பணியாற்றுவது எப்படி இருக்கின்றது?

பதில் – பெண் இயக்குனர்களுடன் வேலை செய்யும் போது என்னோட சொந்த படத்தில வேலை செய்ற மாதிரி அவ்வளவு வசதியா இருக்கும். என்ன விசயமாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம். உடல் உபாதைகளைக் கூட கூச்சமின்றி சொல்ல முடியும். லூஸி, யோகினி ரெண்டுமே சைக்கோ த்ரில்லர் படங்கள். எனவே, அதில ஆடைகள் முக்கியம் பெறும். அதுபற்றியெல்லாம் தயக்கமின்றி பேசிக்கொள்ளலாம். என்ன இருந்தாலும் ஒரு படைப்போட இயக்குனர் தான் அதுக்கு தாய் மாதிரி. அந்த இயக்குனர் பெண்ணாக இருப்பது ஒரு ப்ளஸ் தானே! அதுமட்டுமில்லாம பெண் இயக்குனர் செய்யும் படைப்புக்களுக்கு வெளியிலும் எதிர்பார்ப்பு கூடவாக இருக்கின்றது. அந்த வகையில், பெண் இயக்குனர்களுடன் பணியாற்றுவது பெருமையே!

கேள்வி – சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளை மையப்படுத்தி பெண் இயக்குனர்களே படம் இயக்கும் போது, அதில் நீங்கள் நடிப்பது எப்படி இருக்கின்றது?

பதில் – பாதிப்புக்குள்ளான பெண்கள் அது பற்றி வெளியில வந்து பேசுறது குறைவு. ஒரு பெண்ணாக நானும் பல பிரச்சனைகளை கடந்தே வந்திருக்கின்றேன். எனவே, பாதிக்கப்பட்ட நானே அந்த விசயங்களை தைரியமாக வெளியில் சொல்லும் போது அது போய்ச்சேருற எல்லை கூடவாக இருக்கும். பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொண்டு, அதை வெளியில சொல்லுற எனக்கே நிறைய கேலி, கிண்டல்கள் கிடைக்கும் போது, மற்றப் பெண்கள் எப்படி தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சொல்ல வருவாங்க? பிரச்சனைகளை வெளியில் சொல்லும் போது தான் அது பலருக்கு தெரிய வரும். இப்பிடியான பிரச்சனைகள் என் மூலமாக மற்றங்களுக்கு தெரிய வரணும் எண்டு தான் இந்த மாதிரியான கேரக்டர்களில் நடிக்கின்றேன்.

கேள்வி – நீங்கள் வேலை செய்த வரைக்கும் பெண் இயக்குனர்களிடம் கண்ட ப்ளஸ், மைனஸ் என்ன?

பதில் – முதல்ல மைனஸை சொல்லிடுறன். இங்க சினிமால 50 பேர் இருந்தா, அதில 5 பேர் தான் பெண்களாக இருப்பாங்க. எனவே, பெண் இயக்குனர்கள் ஆண்களுடன் தான் அதிகம் இணைந்து வேலை செய்ய வேண்டியதாக இருக்கின்றது. அப்படி வேலை செய்யும் போது, ஏனையவர்களுடன் சமாளிச்சு போகும் பாங்கு பெண்களுக்கு குறைவாக இருக்கின்றது. இதுவே, ஆண்களாக இருந்தால் அவர்கள் ஈஸியாக சமாளிச்சிடுவார்கள். பெண்களால் தங்கள் நிலையை விட்டு இறங்கிப்போக முடியாமல் இருக்கின்றது. இது சின்னப் பின்னடைவு. அதுபோல, சகிப்புத் தன்மையும் அவர்களிடம் குறைவாக இருப்பதையே காண்கின்றேன்.

அடுத்து ப்ளஸ் என்னும் போது, ஆரம்பத்திலேயே நான் சொன்ன மாதிரி ரொம்ப comfortable ஆ இருக்கும். எல்லாருக்கும் உரிய Space குடுக்கணும் எண்டு நினைப்பாங்க. படம் என்றதையும் தாண்டி தாய் போல பார்த்துப்பாங்க. குறிப்பா, பெண் கலைஞர்களை கவனிப்பாங்க, அங்களுக்குரிய பாதுகாப்பையும் பார்த்துப்பாங்க. இதை எல்லாத்தையும் விட, நாங்கள் பெண் என்றதால சாதிச்சுக் காட்டணும் என்கிற வெறி எல்லாருக்குள்ளையும் இருக்கும்.

கேள்வி – பெண் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றிய படங்கள் பாலியல் ரீதியிலான பாதிப்புக்கள் குறித்து அதிகம் பேசுவதாகவே இருக்கின்றன. அதைத் தாண்டி, உங்களுக்கு என்ன மாதிரியான பாத்திரங்களில் நடிக்க விருப்பம்?

பதில் – எனக்கு, நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படங்கள் பண்ணத்தான் விருப்பம். எனது முதல் திரைப்படமான லூசி படத்தில அதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருந்தது. இயக்குனர் ஈழவாணி நிறைய சொல்லித்தந்தா. சின்ன கேரக்டராக இருந்தாலும் நடிப்புக்கு ஸ்கோப் இருந்தா நிச்சயம் நடிப்பேன். படங்கள்ல நடிக்கணும் எண்டுறதுக்காகவே, எனக்கு வந்த சில பாடல் வாய்ப்புக்களை தவிர்த்திருக்கன். பிரியோசனமான படங்களாக செலெக்ட் பண்ணி நடிக்கணும் எண்டுறது ஆசை.

கேள்வி – உங்கள் பார்வையில் இலங்கைத் தமிழ் சினிமாவின் தற்போதைய போக்குக் குறித்துக் கூறுங்கள்?

பதில் – இங்கு கலைஞர்களுக்குள் ஒற்றுமை இல்லை. இருந்தா நாங்க நிறைய சாதிக்கலாம். ஒரு படைப்பு பற்றி விமர்சிப்பதை விட அதில் பணியாற்றியவர்கள் பற்றி விமர்சிப்பவர்களையே அதிகமாக காண முடிகின்றது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என இலங்கையின் பல இடங்களில் இருந்தும் தமிழ் சினிமா முயற்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றிரண்டு செய்தாலும் அதை சரியா செய்யணும். எல்லோரும் சேர்ந்து செய்தால் கொமர்ஷியலா நாம பெரிய வெற்றியைப் பெறலாம்.